Friday, November 25, 2011

பாரதிராஜா என்னை அதிகமாக அவமானப்படுத்த வேண்டும்!

'எங்கள் ஊருக்கு சினிமா வந்தது. எங்கள் ஊர் சினிமா வில் வந்திருக்கிறதா? வந்தது! பாரதிராஜா வந்த பிறகு வந்தது. எங்கள் ஊரை சினிமாவுக்குக் கொண்டுவந்த பாரதிராஜா, இன்று சினிமா உலகத்தையே எங்கள் ஊருக்குக் கொண்டுவந்திருக்கிறார்!'' - தேனி அல்லிநகர மக்களின் உணர்வை வைரமுத்து அவ்வளவு அழகாக வெளிப்படுத்தினார்!


'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத் தொடக்க விழா. தேனியில் இருந்து வடமேற்குத் திசையில் நான்கு கி.மீ. தூரம் கிராமத்துச் சாலையில் பயணித்தால், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம். அங்கே இருக்கும் வீரப்ப அய்யனார் கோயில்தான் ஸ்பாட். பாலசந்தர், பாலு மகேந்திரா, மணிரத்னம், பாக்யராஜ், அகத்தியன் எனத் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கள் அனைவரும் ஆஜர்.
வழியெங்கும் கள்ளிச்செடிகள், கூரை வீடுகள், மாட்டு வண்டிகள், வைக்கோல் படப்பு, தண்டட்டிக் கிழவி, கோவணக் கிழவர் என்று பாரதிராஜா சினிமாவின் 'கிராமம்’. அய்யனாருக்குக் கிடா வெட்டி, பூஜை நடத்தப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தவர்களுக்குக் காத்திருந்தது ஆச்சர்யம். மேடையில் இருந்த திரையுலகப் பிரம்மாக்களுக்குத் தீபாராதனை காட்டி, பூஜை செய்த கிராமத்துப் பூசாரி, பார்வையாளர் களுக்கும் தீபாராதனை காட்டியபோது செம கிளாப்ஸ்.
மகள் கார்த்திகாவுடன் வந்த ராதா, பாக்யராஜுக்கு அருகில் அமர்ந்துகொண்டார். ''பிறந்த ஊர் எல்லாத்துக்கும் ஒண்ணுன்னா, எனக்கு மட்டும் ரெண்டு... கோயம்புத்தூர் ஒண்ணு. இன்னொண்ணு இந்த அல்லி நகரம். நான் இங்க கெஸ்ட்டா வரலை... ஃபர்ஸ்ட் படத்துக்கு எப்படி அசிஸ்டென்ட்டா வந்தேனோ, அப்படித்தான் இப்பவும் வந்திருக்கேன்!'' என்று குருபக்தி யைக் காட்டினார் பாக்யராஜ்.
மைக் பிடித்த குஷ்பு, பாரதிராஜாவின் கிராமத்துப் படம் ஒன்றில் தான் நடிக்க ஆசைப்பட்டதைச் சொன்னார். அதற்குப் பதில் அளித்த பாரதிராஜா, ''ரெட்டைச் சடையும், தாவணியும் போட்டுக்கிட்டு வா... நடிக்கவைக்கிறேன். காந்திமதியையே பாவாடை தாவணியில் காட்டின ஆளு நான்!'' என்று சொல்ல... குஷ்பு முகத்தில் வெட்கச் சிவப்பு!
இயக்குநர் பாலுமகேந்திரா, ''இன்று பாரதி 44-வது படத்தை இயக்கவிருக்கிறார். அப்படிப் பார்த்தால், அவருக்கு 44 வயதுதான். இன்னும் 56 வயது இருக்கிறது. இன்னும் 56 படங்களை எடுப்பார். அதே நேரத்தில், எனக்கு 18 வயதுதான் ஆகிறது என்பதைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!'' என்று கலகலப்பூட்டினார்.
'ரத்தின’ச் சுருக்கமாகப் பேசுவார் என்று தெரிந்ததால், மணிரத்னம் பேசும்போது ஆரவாரத்தை அடக்கி அமைதியானது கூட்டம். ''30 வருஷமா பாரதிராஜா தாக்கம் இல்லாம ஒரு படமும் வந்தது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அடுத்து வருகிற படங்களும் அவருடைய தாக்கத் தோடுதான் வெளிவரும்!'' என்று முடித்துக் கொண்டார்.
''பாரதிராஜாவின் முதல் ரசிகன் நான் தான். சும்மா சொல்லவில்லை. '16 வயதினிலே’ படம் வெளியாகும் முன்பே ப்ரிவியூ பார்த்துவிட்டு, அவருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தேன்!'' என்று சிலாகித்தார் பாலசந்தர்.
''கலை என்ற பெயரால், எழுத்து என்ற பெயரால், புத்தகம் என்ற பெயரால், இசை என்ற பெயரால், இந்த மண்ணின் கலாசாரத்தை நாம் சுரண்டிப் பதிவு செய்திருக்கிறோம். இந்த மக்களிடம் இருந்து நீங்களும், நானும், இளையராஜாவும் எவ்வளவோ எடுத்திருக்கிறோம். ஆனால், என்ன கொடுத்திருக்கிறோம்? மக்களே! எங்கள் ஆயுள் தீருவதற்குள் உங்கள் குழந்தைகளின் கல்விக்கு நாங்கள் ஒரு அறக்கொடை செய்வோம்.
(பாரதிராஜாவைப் பார்த்து...) நீங்களும் நானும் சேர்ந்து நம் மக்களுக்காக ஒரு கல்வி அறக்கட்டளையைத் தொடங்கு வோம். அதற்கு என் பங்களிப்பாக 5 லட்சமும் என் நண்பர் கோவில்பட்டி நாகஜோதி பங்காக 10 லட்சமும் தருகிறோம். இது தவிர, இந்தப் படத்துக்குப் பாட்டெழுத பாரதிராஜா தருகிற மிகப் பெரிய தொகை யையும் சேர்த்துக்கொள்கிறேன். இப்போது சொல்லுங்கள்... நீங்கள் எவ்வளவு பங்களிப்பு தரப்போகிறீர்கள்?' என்று கேட்டார் வைரமுத்து.
உடனே பாரதிராஜா, ''நீ விடாக்கண்டன்னா... நான் கொடாக்கண்டன்யா. நான் என்னைக்கு உனக்குச் சம்பளம் தந்திருக்கேன்? நீ மிகப் பெரிய, விலை மதிப்பு இல்லாத கவிஞன்யா. காசு பணத்தை வெச்சி உன்னை அவமானப்படுத்த நான் விரும்பலை!'' என்றார் சிரித்தபடி.
விடாத வைரமுத்து, ''பாரதிராஜாவுக்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள நான் தயார். தயவுசெய்து என்னை மிக அதிகமாக அவமானப்படுத்தும்படி பாரதிராஜாவைக் கேட்டுக்கொள்கிறேன்!'' என்று சொல்ல... ஒரே சிரிப்பலை.
இறுதியில் 5 லட்சம் கொடுப்பதாகச் சொன்னார் பாரதிராஜா. அப்போது எழுந்த பாலுமகேந்திரா, 'திரையுலகின் மாடி வீட்டு ஏழையான நானும் இந்த அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த தொகையாக ரூபாய் 10 ஆயிரத்தை வழங்குகிறேன்!'' என்று அறிவித்த போது, நெகிழ்ந்துவிட்டார் வைரமுத்து.
''நான் ஏன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா? இது என் தாத்தனுக்கும் தாத்தன் பார்த்த மரம். இங்கே வேட்டைக்கு வந்திருக்கேன். இங்கேமேய்ஞ் சுக்கிட்டு இருக்கிற ஆட்டுல களவாணித் தனமாப் பால் கறந்து குடிச்சிருக்கேன். நான் முதல்ல இந்த வனாந்திரத்தைப் படிச்சேன். அதுக்கு அப்புறம்தான் உலகத்தைப் படிச்சேன். நான் இன்னும் கொஞ்சம் வயசாகி, தளர்ந்து போயிருந்தால் யார் விழாவுக்குக் கூப்பிட் டாலும் தவிர்த்திருப்பேன். ஆனால், பால சந்தரும் பாலுமகேந்திராவும் தங்கள் உடல் நலத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் இங்கே வந்திருக்கிறார்கள். இங்கே வந்துள்ள தமிழ்த் திரையுலகினருக்கு ஒட்டுமொத்தமாக நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குநர் பாலசந்தரின் கால்களில் விழுந்து வணங்குகிறேன்!'' என்று கூடியிருந்த அத்தனை விருந்தினர்களையும் நெகிழவைத்தார் பாரதிராஜா!

No comments:

Post a Comment