Friday, November 18, 2011

பரஞ்சோதி 'இன்' சிவபதி 'அவுட்'

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் விறுவிறுவென உச்சத்தைத் தொட்டுவிட்டார் பரஞ்சோதி. 'இப்போதைக்கு திருச்சியில் பட்டொளி வீசி பறப்பது பரஞ்சோதியின் கொடிதான்!’ என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார் பரஞ்சோதி.
எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த காரணத்தால் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பரஞ்சோதி வசம் இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சித் தலைவியான ஜெய லலிதாவே போட்டியிட்டதால், வேறு தொகுதி எதுவும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வரானதும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற அலுவலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் பரஞ்சோதி. அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று பூரித்தார், பரஞ்சோதி.
இதற்கிடையில், எதிர்பாராத வகையில் அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் சிக்கி அகால மரணம் அடையவே, திருச்சி மேற்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. மரியம்பிச்சையின் குடும்பத்தில் இருந்து யாருக்கேனும் வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வந்த சூழலில், பரஞ்சோதிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. பெரும்புள்ளி கே.என்.நேருவை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். வெற்றிக்குப் பரிசாக, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தேடி வந்தது. அந்த சந்தோஷத்தில் திளைத்தபோதே, அமைச்சர் பதவியும் தேடி வந்தது. இந்து சமய அற நிலையங்கள், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை பரஞ்சோதிக்கு ஒதுக்கப்பட்டது. இதுவரை அமைச்சர் மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த சிவபதி 'முன்னாள்’ ஆகிவிட, பரஞ்சோதி 'ஆல் இன் ஆல்’ ஆகியிருக்கிறார்!

அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கையோடு, கடந்த 9-ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவலில் நடந்த மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப் மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பரஞ்சோதி, ''தமிழகத்திலேயே ஸ்ரீரங்கத்தில் தான் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே முதன் முறையாக மகளிர் தோட்டக் கல்லூரி திருச்சியில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஸ்ரீரங்கத்தில் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. ஒரு அரசு 50 ஆண்டு காலத்தில் செய்யும் சாதனையை முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த ஐந்து மாதத்திலேயே செய்து முடித்துவிட்டார்'' என்று பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி மற்றும் சிறப்புத் திட்ட அமலாக் கத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு செம காரம். ''சாதாரண தொண்டனை அமைச்சராக்கி அழகு பார்த்த முதல்வர் புரட்சித் தலைவி அம்மா இருக்கும் போயஸ் தோட்டத்தை நோக்கி வணங்குகிறேன்'' என்று பெரிதாக கையெடுத்துக் கும்பிட்டவர், ''புரட்சித் தலைவி அம்மாவை வெற்றி பெற வைத்து மீண்டும் அவரை முதல்வர் ஆக்கிய புண்ணிய பூமி இது. எல்லாத் துறைகளிலும் இந்தத் தொகுதி முன்னேறப் போவது உறுதி. தாளிப்பதற்கு வெங்காயம்கூட கொடுக்காதவர் கருணாநிதி. ஆனால், ஏழை வீட்டுப் பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுப்பவர் நமது முதல்வர். கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பதை போல, பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் தினம் ஒரு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர்.
2006-ல் நடந்த விபத்தின் காரணமாக (சட்டமன்றத் தேர்தலை சொல்கிறார்) முதல்வரான கருணாநிதியும், அவரது குடும்பமும் ஏராளமாக சம்பாதித்து விட்டனர். அதன் பயனாக இன்று அவரது மகள் கனிமொழி திகார் சிறையில் இருக்கிறார். செய்த தவறுகளுக்காக கருணாநிதியின் குடும்பம் தண்டனை யின் பிடியில் சிக்கி இருக்கிறது'' என்றார்.
அடுத்து பேசிய திருச்சி எம்.பி-யான குமார், ''லோக்சபாவில் இருக்கும்போது என்னை சந்தித்த பஞ்சாப் எம்.பி. ஒருவர், தமிழகத்தில் எல்லாமே இலவசமாகத் தருகிறார்களாமே... நாங்களும் அங்கேயே வந்துவிடலாம் என்று நினைக்கிறோம்’ என்று சொன்னார். அதற்கு நான், 'நீங்கள் தமிழ் நாட்டுக்கு வர வேண்டும் என்றால், எங்கள் முதல்வர் பிரதமராக ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொன்னேன். அந்த எண்ணம் நிறைவேற மக்களா கிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
பதவி பறிக்கப்பட்ட சிவபதி, ''என்றும் உங்களில் ஒருவனாக இருந்து இந்த மாவட்டத்துக்கும், தொகுதி மக்களுக்கும் நல்ல விஷயங்கள் கிடைக்கப் பாடுபடு வேன்'' என்றார் அடக்கமாக.
திருவானைக்காவலில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், தனது ஆதரவாளர்கள் புடைசூழ சைரன் காரில் வலம் வந்து திருச்சியை சுற்றிச்சுற்றி வந்து கலக்கினார் பரஞ்சோதி.

No comments:

Post a Comment