உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்க வேண்டும் என மாநில அமைச்சரவையிலும், சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றி, நாடு முழுவதும் பரபரப்பான விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளார் அம்மாநில முதல்வர் மாயாவதி.
"உத்தரப்பிரதேசத்தில் இப்போதைய மக்கள்தொகை 19 கோடி. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் இது 16 சதவீதம். பெரிய மாநிலமாக இருப்பதால், சிறப்பான நிர்வாக வசதிக்காக இந்தப் பிரிப்பு அவசியம்'' என்பது அவர் சொல்லும் காரணம்.
உ.பி.யின் கிழக்குப் பகுதியைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலமாகவும், தெற்குப் பகுதியைப் பிரித்து புந்தேல்கண்ட் மாநிலமாகவும், மத்திய பகுதியைப் பிரித்து அவத் பிரதேசமாகவும், மேற்குப் பகுதியைப் பிரித்து பஸ்சிம் பிரதேசமாகவும் உருவாக்க வேண்டும் என்பது மாயாவதியின் திட்டம்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடையவில்லையே என்று ஒரு மாநில முதல்வர் கவலைப்படுவது நியாயமான ஒன்று. ஆனால், பதவியேற்று 4 ஆண்டு இல்லாத கவலை, ஒருசில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் ஏற்படுவதுதான் அனைவரையும் சந்தேகம்கொள்ள வைக்கிறது.
""மக்களை முட்டாளாக்கும் அரசியல் நாடகம்'' என சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங்கும், ""வோட்டு அரசியல்'' என பாஜக மூத்த தலைவர் அத்வானியும் குறைகூறியுள்ளனர். ஏற்கெனவே உ.பி.யைப் பிரிக்க வேண்டும் எனக் கூறிவரும், ராஷ்ட்ரீய லோக்தளம் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஒரு மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்குவது என்பதில் மத்திய அரசுதான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். இருப்பினும், இப்படிச் சொல்வதன் மூலம் மக்களை இன்னும் நெருக்கமாகச் சென்றடையலாம் என மாயாவதி கருதுகிறார்.
ஆனால், அரசியல்வாதிகளின் இதுபோன்ற தேர்தல் நேரத்துக் கவலைகளையெல்லாம் தீவிரமாக எடுத்துக்கொண்டு, மாநிலத்தைப் பிரிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்று அலசி ஆராய்ந்துகொண்டிருப்பது வீண்வேலை என்றே தோன்றுகிறது.
இப்போதைக்கு இது மாயாவதியின் தேர்தல் நாடகமாக இருக்கலாம். ஆனால், ஒருவேளை உ.பி.யை நான்காகப் பிரித்தால், நான்கு மாநிலங்களிலும் பகுஜன் சமாஜை ஆட்சியில் அமர்த்தி, இந்தியாவிலேயே காங்கிரஸýக்கு அடுத்தபடியாக அதிக மாநிலங்களில் ஆட்சிபுரியும் கட்சி என்ற நிலையை அடைவது அவரது தொலைநோக்குத் திட்டமாக இருக்கலாம். (தலைநகரில் இருந்து தொலைதூரத்தில் உள்ள மக்களை நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பது, இந்தத் தொலைநோக்குத் திட்டத்தில் அடங்கிவிடும்!)
ஆந்திர மாநிலத்தில் சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு "தெலங்கானா' என்ற மந்திரச் சொல்தான் மிகப்பெரிய முகவரியை ஏற்படுத்திக் கொடுத்தது.
மாநிலம் முழுவதும் செல்வாக்கு இல்லாத கட்சிகள், தங்களுக்குச் செல்வாக்கு இருக்கும் பகுதியை மட்டும் தனி மாநிலமாகப் பிரித்து, ஆட்சியில் அமர வேண்டும் என்று நினைப்பது நியாயமான(!) ஆசை.
ஆனால், 19 கோடி மக்கள்தொகை கொண்ட உ.பி.யில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த மாயாவதியும், இப்படி மாநிலத்தைப் பிரிக்க நினைப்பதற்குப் பின்னால் "என்னவோ ஒரு திட்டம்' இருக்குமோ?
சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, இப்போதைய மக்கள்தொகைப் பெருக்கத்துக்கேற்ப மாநிலங்கள் பிரிக்கப்படுவது மிக அவசியம்.
1998-ல் பிகாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிந்ததும், மத்தியப் பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிந்ததும், உ.பி.யிருந்து உத்தரகண்ட் பிரிந்ததும்கூட மிகத் தேவையான விஷயம். ஆனால், வருங்காலத்தில் மாநிலங்கள் பிரிப்பு என்பது சாதாரண விஷயம் அன்று.
ஆந்திர மாநிலத்தில் தெலங்கானாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் உள்ள விஷயங்களே அதற்கு சாட்சி. ஒரே மொழி பேசும் மக்களை இரு மாநிலங்களாகப் பிரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், இப்போதைய தலைநகர் உனக்கு எனக்கு என பங்கு கேட்பது உள்ளிட்டவையும் இதற்குக் காரணம்.
தங்கள் பகுதி வளர்ச்சி பெற வேண்டும், தலைநகருக்கு அருகில் நாம் இருக்க வேண்டும் என்கிற மக்களின் நியாயமான விருப்பங்கள், இந்த மாநிலப் பிரிப்பை ஏற்றுக்கொள்ளக்கூடும். அதேவேளையில், "ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்ற மனநிலையில் இருக்கும் அரசியல்வாதிகளைத்தான் எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டியிருக்கிறது.
இன்றைய இந்தியாவில் மாயாவதி மட்டுமன்றி, அரசியல்வாதிகள் அனைவருமே "மாயாஜாலம்' காட்டி மக்களை ஏமாற்றத்தானே துடிக்கின்றனர்
No comments:
Post a Comment