Tuesday, November 29, 2011

சைரஸ் மிஸ்ட்ரி - டாடா குழுமத்தின் அடுத்த வாரிசு!


சைரஸ் மிஸ்ட்ரிக்கு சூப்பர் சனிப் பெயர்ச்சி! 71 பில்லியன் டாலர்கள் சொத்துள்ள இந்தியாவின் மதிப்புமிகுந்த டாடா குழுமத்தின் அடுத்த வாரிசு சைரஸ். ரத்தன் டாடா ரிடையர் ஆகும் முடிவை வெளியிட்டதில் இருந்து, டாடா குழுமத்துக்கு அடுத்த தலைவரைத் தேடும் இமாலயப் பணியை ஐந்து பேர் கொண்ட குழு, கடந்த பதினைந்து மாதங்களாகச் செய்து வந்தது. இதுவரை டாடா குடும்பத்துக்குள்ளேயும் வெளியேயும் பதினான்கு பேர்களை இக்குழு இன்டர்வியூ செய்தது. ஆனால், எதுவும் சரியாக வரவில்லை.ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடாவே அடுத்த தலைவராக வரவாய்ப்புண்டு என்று ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. அதேபோல் பெப்சி கோவின் இந்திரா நூயி, இந்துஸ்தான் லீவரின் முன்னாள் தலைவர் கேகி டாடிசேத் ஆகியோர் பெயர்களும் வலம் வந்தன. ஒருவகையில், இவர்களெல்லாம் தேர்வாகாது போனதற்கு ரத்தன் டாடாவின் எதிர்பார்ப்பே காரணம்.நாற்பதுகளில் இருப்பவராக, இளையவராக, திறமையானவராக இருக்க வேண்டும் என்றே ரத்தன் விரும்பினார். சைரஸ் இதற்குப் பொருத்தமாக அமைந்தார். மேலும், சைரஸ், வேற்று நபரும் அல்ல. டாடா குழுமத்தில் அதிகபட்சமாக 18 சதவிகிதம் பங்குகளை வைத்திருக்கும், பலோன்ஜி ஷப்பூர்ஜியின் இளைய மகன். பலோன்ஜி, 2005 வரை, டாடா குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஓய்வு பெற்றதும், சைரஸ் டாடா குழுமத்தின் ஒரு டைரக்டர் ஆனார்.


அப்போதிலிருந்து, சைரஸை, ரத்தன் டாடா கவனித்து வந்திருக்கிறார். டாடா என்று பெயரில்லையே தவிர, சைரஸும் ரத்தன் டாடாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்; பார்ஸி இனத்தைச் சேர்ந்தவரும் கூட. சைரஸும் லேசுபட்டவர் அல்ல. தமது அப்பா பலோன்ஜியின் மிகப் பெரிய எஸ்.பி. குழுமத்தின் தலைவராக இருந்து கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்தவர். ரத்தனைப் போல் கோஃப் விளையாட்டிலும் ஏராளமான புத்தகங்கள் வாசிப்பதிலும் ஆர்வமுடையவர். குரல் உயர்த்தாதவர். இரண்டு மகன்கள். 2012 டிசம்பரில் ரத்தன் ரிடையர் ஆவார். அடுத்த பன்னிரெண்டு மாதங்களும், சைரஸ், ரத்தனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, மொத்த டாடா சாம்ராஜ்ஜியமும் சைரஸ் கையில். பாதுகாப்பான நம்பிக்கையானவரின் தோள்களில்!

No comments:

Post a Comment