சூப்பர் ஸ்டாரின் ‘ராணா’ தொடங்கப்படுமா இல்லையா என்கிற கேள்விக்கு பதிலாக நிலவிய அதீத மௌனம் கலைந்தது. உடல்நலம் தேறி மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்ட ரஜினியின் விருப்பத்தின் பேரிலேயே ‘கோச்சடையான்’ என்று தலைப்பிடப்பட்டு, அவரது அடுத்த படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கனவே ‘சுல்தான் தி வாரியர்’ என்ற அனிமேஷன் படத்தை ரஜினியை வைத்து உருவாக்கி இயக்கிய சவுந்தர்யா, அதே படத்தைத் தலைப்பு மாற்றி இன்னும் சில காட்சிகளை இணைத்து வெளியிடப்போகிறார் என்று ஒரு தகவலும் இருந்து வந்தது. அதுதான் இதுவா என்ற கேள்வியும் இப்போது எழ, ‘‘அந்தக் கதை வேறு, ‘கோச்சடையான்’ கதை வேறு... இது முற்றிலும் மாறுபட்ட புதிய படம்’’ என்று இப்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனிமேஷன் விஷயங்களில் கைதேர்ந்த சவுந்தர்யா, நவீன அனிமேஷன் தொழில்நுட்ப உத்தியான ‘பெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் டெக்னாலஜி’யைப் பயன்படுத்தி படத்தை ‘3 டி’யில் உருவாக்க இருக்கிறாராம். இந்த உத்திதான் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘டின் டின்’ படங்களில் கையாளப்பட்டிருக்கிறது. ஆக, இந்தப்படத்தில் ரஜினி நடிக்க, அவரது ஆக்ஷன்களை உள்ளடக்கிய அனிமேஷன் ரஜினியையும் பார்க்கப்போகிறோம் என்பது சொல்லாமல் தெரிகிறது.
‘ராணா’ மெகா பட்ஜெட்டில் உருவாக விருக்கும் பிரமாண்டப்படம். அதில் நடிக்க தான் முழுமையாகத் தயாராகவில்லை என்று நம்பும் ரஜினி, அதுவரை காத்திருக்க வைக்க விரும்பாத தன் ரசிகர்களுக்கான ட்ரீட்டாகவும், ‘ராணா’ எப்படி வரும் என்பதற்கான வெள்ளோட்டமாகவும் ‘கோச்சடையானை’ பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறார் என்பது மட்டும் இப்போது புரிகிறது. அதை உறுதிப்படுத்தும் விஷயமாக ‘கோச்சடையான்’ ‘ராணா’வின் முதல் பகுதியாக சொல்லப்படுகிறது. 2012 ஆகஸ்டில் ‘கோச்சடையான்’ வெளியாக, இதன் சீக்குவலாக தயாராகும் ‘ராணா’வில் தன் வழக்கமான வேகத்துடன் தன் இயல்பான முகம் காட்டி ரசிகர்களைப் பரவசப்படுத்துவார் ரஜினி என்று நம்பலாம். அதுவரை கோச்சடையான் யார், அவரது கதை என்ன என்பது பற்றியெல்லாம் சுவாரஸ்யமான தேடல்களில் இறங்கலாம் மீடியாக்கள்.
No comments:
Post a Comment