Saturday, November 12, 2011

அமெரிக்கா செல்கிறார் ஜெ

வளர்ச்சிகா !சிகிச்சைக்கா!




''நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்'' என ஆரம்பித்தார் கழுகார்!

''முதல்வர் ஜெயலலிதா விரைவில் அமெரிக்கா செல்கிறார்!'' - ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது!

''அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த ஜூலையில் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தாரே... அதன் தொடர்ச்சியா இந்த விசிட்?'' என்று ஆவலா னோம்.

''அப்படித்தான் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்! போயஸ் கார்டனில் செல்வாக்குடன் வலம் வரும் மனிதர்களில் ஒருவர் எம்.ராமச்சந்திரன். இவரை 'எம்.ஆர்' என்றே அ.தி.மு.க. வட்டாரத்தில் அழைக்கிறார்கள். இவரின் மூத்த மகன் தமிழகத்தில் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் தற்போது இருக்கிறார். இவர் ஹிலாரியின் வெளியுறவு அரசியல் ஆலோசனைக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறாராம். ஹிலாரியின் டெல்லி விசிட்டில் சென்னை புரோகிராமைச் சேர்த்து முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததில் இவருக்கும் பங்கு உண்டாம்.
முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளைப் பட்டியல் போட்டு அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு தமிழக முதல்வர் தரப்பில் அனுப்பப்பட்டது. அது அப்படியே, ஹிலாரியின் கவனத்துக்கும் சென்றதாம். நன்றாகப் படித்து திருப்தி ஆன பிறகே, சென்னை புரோகிராமிற்கு ஹிலாரி ஒப்புக்கொண்டாராம். அவர் இங்கு வந்தபோது, உடன் வந்த அமெரிக்க அதிகாரிகளில் ஒருவராக எம்.ஆரின் மகனும் நடமாடியதாக நம் ஊர் உளவுத் துறை அதிகாரிகள் கிசுகிசுக்கிறார்கள்.''



''அப்படியா... சந்தோஷம். ஹிலாரிகூட நம் முதல்வரை அமெரிக்கா வரச் சொல்லி அழைப்பு விடுத்தாரே''

''ஹிலாரியும் ஜெயலலிதாவும் நீண்ட நேரம் பேசினார்கள். இலங்கைப் பிரச்னையில் ஆரம்பித்து தொழில், வர்த்தகத் துறைகளில் அமெரிக்க ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தார்கள். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் தமிழகத்தில் முதலீடு செய்ய அமெரிக்கர்களின் வரவை எதிர்பார்ப்பதாக முதல்வர் ஜெயலலிதா அப்போது கேட்டுக்கொண்டாராம். தமிழகத்தில் 10 இடங்களில் சோலார் சக்தி பூங்கா அமைக்க இருக்கும் திட்டம் பற்றியும் விரிவாகச் சொல்ல... அதற்கு ஹிலாரியோ, 'எங்கள் நாட்டில் உள்ள மாகாணங்களும் தமிழ்நாடு போன்ற இந்திய மாநிலங்களும் கூட்டாக, தொழில், வர்த்தகத் துறைகளில் கைகோத்துச் செயல்படலாம். அந்த வகையில் நான் உதவத் தயார்' என்றாராம். அந்தச் சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் ஆழமான அறிவாற்றல் மிகுந்த பேச்சை ரசித்து, 'தமிழகத்தின் மாபெரும் சாதனைகளை அமெரிக்கர்கள் அறிந்துகொள்ள நீங்கள் எங்கள் நாட்டுக்கு அவசியம் வர வேண்டும். அரசு முறைப் பயணமாக நீங்கள் அங்கே வரும் வகையில் எங்கள் தரப்பில் இருந்து அழைப்பு அனுப்புகிறேன்' என்று வெளிப்படையாக சொல்லிவிட்டுப்போனாராம்!''

''முதல்வர் ஜெயலலிதாவும் அமெரிக்கா போக ரெடியாகிவிட்டாரா? எப்போது விசிட்?''

''ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம். எப்போது வேண்டுமானாலும் கிளம்பத் தயார். ஆனால், அமெரிக்காவில் இருந்து முறைப்படி அழைப்பு வர வேண்டுமே? தற்போதைய அரசியல் சூழ்நிலை அங்கு பிஸியாக இருப்பதால், ஆட்சியாளர்களும் பிஸி. அதனால், இன்விடேஷன் வருவது தற்காலிகமாகத் தள்ளிப்போகிறதாம். அதே நேரத்தில், இந்திய அரசியலின் அசைக்க முடியாத சக்திகளில் ஜெயலலிதாவும் ஒருவர் என அமெரிக்க அரசு நினைக்கிறதாம். இந்தியாவில் நிலவும் அரசியல் குழப்பங்களால் எப்போது வேண்டுமானாலும் பாராளுமன்றத் தேர்தல் வரலாம். அதற்கு சற்று முன்பாக ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு அழைத்துக் கௌரவிக்கலாம் என யோசிக்கிறார்களாம்!''

''ஜனவரிக்குப் பிறகு இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா?''

''தலைமைச் செயலகத்தில் உள்ள ஒரு துறையின் முக்கிய அதிகாரிகள், முதல்வரின் அமெரிக்க பயணம் பற்றிய முன் ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அமெரிக்க நாட்டு அரசில் முக்கியப் பதவிகளில் உள்ள இந்தியர்கள் சிலருடன் சந்திப்புகள், தமிழகத்துக்கு வர ஆர்வம் உள்ள தொழில் முதலீட்டாளர்கள், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட வி.ஐ.பி-கள்... எனப் பலதரப் பட்டவர்களைத் தனித்தனியே சந்தித்து உரை நிகழ்த்தப்போகிறாராம் முதல்வர். இதன் ப்ளுபிரின்ட் மத்திய அரசுக்கும், தமிழக அரசுத் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாம். பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றியெல்லாம் தமிழக அதிகாரிகளுக்கு டெல்லி அதிகாரிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்த வட்டத்தைத் தாண்டி முதல்வர் ஜெயலலிதா பேச மாட்டார் என்றே கருதுகிறது மத்திய அரசு. இலங்கைப் பிரச்னை பற்றித்தான் மத்திய அரசு மிகவும் கவலைப்படுகிறதாம்.

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை மனதில்வைத்து இந்தப் பயணத் திட்டம் வகுக்கப் பட்டாலும் இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்! ''

''அதையும் சொல்லும்!''

''உடல் நிலை குறித்த சில ஸ்பெஷல் செக்-அப் செய்து கொள்ளவும் முதல்வர் நினைப்பதாகச் சொல்கிறார்கள். அவருக்குச் சிறுசிறு தொந்தரவுகளாக இருந்த முதுகு வலி, கால் வலி போன்றவை குறித்தும் சில சிகிச்சைகளை செய்துகொண்டு திரும்பலாம் என்கிறார்கள்!''

''நீர் சொல்வதைப் பார்த்தால், முதல்வர் ஜெயலலிதா ஃப்ளைட் ஏறவேண்டியதுதான் பாக்கி போலிருக்கிறதே?''

''அப்படித்தான் வைத்துக்கொள்ளும்! பெங்களூரு கோர்ட்டில் நடக்கும் வழக்கு விவகாரத்தால், ஜெயலலி தாவின் அமெரிக்க விசிட்டுக்கு எந்த ஓர் இடையூறும் வந்துவிடக் கூடாது என்று அ.தி.மு.க. தரப்பில் நினைக் கிறார்களாம். அதனால்தான், கோர்ட்டுக்கு முழு ஒத்துழைப்பு தந்துவருகிறாராம் ஜெயலலிதா. அமெரிக்க விசிட் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் இருக்க வேண்டும் என்று இப்போது நிர்ணயித்து இருக்கிறார்கள்!'' என்று சொல்லி மூச்சு வாங்கினார் கழுகார்!

''லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் எங்கே சைலன்ட் ஆக இருக்கிறார்களே?'' என்றோம்.

''அவர்கள் சைலன்ட் ஆக இருக்கிறார்கள் என்றால், அடுத்து வேறு ஓர் அதிரடிக்கு ஆயத்தமாகிறார்கள் என்று அர்த்தம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பலரின் செயல்பாடுகள் பற்றி ஏகப்பட்ட புகார்கள் தமிழக அரசுக்கு வந்துள்ளனவாம். அவற்றை எல்லாம் பரிசீலித்துப் பூர்வாங்க ஆதாரங்கள் இருக்கின்றனவா? என்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விசாரிக்க சொன்னதாம் அரசு மேலிடம். அவர்களும் ரகசியமாக விசாரித்து 'ஆதாரம் இருக்கிறது' என்று சொல்லிவிட்டார்களாம். அதை ஏற்று, அடுத்த கட்டமாக, 'விரிவான விசாரணை' நடத்தும்படி உத்தரவு போடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முழு மூச்சில் விசாரணையில் இறங்கிவிட்டார்கள்.''

''துணைவேந்தர்கள் என்ன மாதிரியான முறைகேடு செய்திருப்பார்கள்?''

''பதவியைப் பெற தட்சணை கொடுத் தது ஒரு ரகம். ஒரு துணைவேந்தர் இதற்காக மதுரை பக்கம் மூணு சி-யை கொடுத்தாராம். அவர் அப்படி கொடுக்கிறார் என்றால், வரும்படி பல மடங்கு இருக்கும் என்பதை கணக்குப்போட்டுத்தானே தட்சணை கொடுத்திருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரிக்கிறார்கள். அடுத்து, பதவி உயர்வு, பணி மாற்றம்.. இப்படிப் பல்வேறு வகைகளில் அசையா - அசையும் சொத்துக்கள் சேர்த்திருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரிக்கிறார்கள். பலரின் சொத்து பயோ-டேட்டாவை அந்தந்தப் பல்கலைக்கழக ஊழியர்களே அரசுக்கு பெட்டிஷன் போட்டிருக்கிறார்களாம்'' என்று சொன்ன கழுகாரிடம்



''இரண்டு சந்தேகங்கள்...'' என்றோம்.

''கேளும்!''

''பரிதி இளம் வழுதியும் ஸ்டாலினும் சமாதானம் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்களே?''

''பரிதிக்கு வேண்டப்பட்ட ஒரு எழும்பூர் பிரமுகரை அறிவாலயத்துக்கு அழைத்து ஸ்டாலின் பேசினார். இருவரும் சேர்ந்து கருணாநிதியைப் பார்த்தார்கள். 'என்னைத் தெரியாத ஆளாய்யா பரிதி! என்கிட்ட பேசச் சொல்லுய்யா’ என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். அந்தப் பிரமுகர், இந்த விஷயத்தை பரிதியிடம் வந்து சொல்ல... 'அது முடிஞ்சுபோன கதை’ என்று பரிதி விளக்கம் அளித்துவிட்டார். பரிதியை கருணாநிதியிடம் அழைத்துச் செல்ல சிலர் முயற்சித்தார்கள். ஆனால் பரிதி மறுத்துவிட்டார். சரி... அடுத்த சந்தேகம் கேளும்!''

''சீமான் கட்சியில் பா.ம.க. வேல்முருகன் சேரப்போவதாகச் சொல்கிறார்களே?''

''கடலூர் அருகில் உள்ள வேல்முருகனின் தோட்டத்துக்கு சீமான் வந்தார். ஐந்து மணி நேரத்துக்கு மேல் பேசினார். 'தனிக் கட்சிதான்’ என்ற தனது முடிவை அழுத்தமாக அறிவித்து விட்டாராம் வேல்முருகன். 13 மாவட்டங்களுக்கு பொறுப்புக் குழுவை அறிவித்துவிட்டு, 'நீதி கேட்டு நெடும் பயணம்’ கிளம்பத் தயாராகி விட்டார் வேல்முருகன்!'' என்று சொல்லிவிட்டு கழுகார் விட்டார் ஜூட்!

நன்றி vikatan


No comments:

Post a Comment