2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் எஃப்.ஐ.ஆர்., விசாரணை, கைது, குற்றப்பத்திரிகை, குற்றப்பதிவு, ஜாமீன் மறுப்பு போன்ற நிலைகளைக் கடந்து, கடந்த 11-ம் தேதி நீதிமன்ற விசாரணை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிராக வைக்கப் படும் ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த சில காட்சிகளுக்காகவும், 154 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
இதில் பல வி.ஐ.பி. சாட்சிகளும் அடக்கம். இது தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களும் பல ஆவணங்களையும் சாட்சியங்களையும் நிறுத்தலாம். இந்த மாதத்தில் மட்டும் 28 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.
இதில் பல வி.ஐ.பி. சாட்சிகளும் அடக்கம். இது தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களும் பல ஆவணங்களையும் சாட்சியங்களையும் நிறுத்தலாம். இந்த மாதத்தில் மட்டும் 28 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஆ.ராசா எடுத்த எடுப்பிலேயே சாட்சிகள் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடவந்தார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் பாலாஜி சுப்பிரமணியம் மற்றும் மனுசர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வழக்கில் விசாரணை முழுமையாக முடிந்த பின்னர்தான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் குற்றப் பதிவு செய்யப்பட்ட பின்னரும், இந்த வழக்கில் விசாரணை முடியவில்லை. இது சட்டத்திற்குப் புறம்பானது’ என்று சொல்லி இருந்தனர்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக (பி.சி.எல்.) வழக்கறிஞரான பாலாஜி சுப்பிரமணியம், சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசாவின் அட்வகேட் - ஆன் - ரிக்கார்டு. இவர் சார்பில் ஆ.ராசாவுக்காக வாதாட நியமிக்கப்பட்டு இருப்பவர்தான், மூத்த வழக்கறிஞர் சுசில் குமார். அவர், ''ஒரு பக்கம் சி.பி.ஐ. வழக்கு விசாரணை முடியவில்லை என்கிறது. ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெற்ற மற்ற லூப் டெலிகாம் போன்ற நிறுவனங்கள் மீது விசாரணை தொடர்வதாகச் சொல்கிறது. அந்தக் குற்றச்சாட்டுகளும், குற்றப் பத்திரிகைகளும் வரும் நிலையில் இந்த வழக்கு முற்றுப் பெறாத நிலையில் இருக்கிறது. இந்த சமயத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடப்பது எப்படி? குற்றவியல் நடைமுறைப் பிரிவு 173-ன்படி புலன் விசாரணை முற்றுப் பெற்ற பின்னர்தான் இந்த சம்பிரதாயங்கள் தொடங்க வேண்டும்'' என்றார். ஆனால், இதனை நீதிபதி சைனி ஏற்கவில்லை. அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
முதல் நாள் மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சாட்சியிடம்தான் முழு விசாரணை நடந்தது. பவர் கட் ஏற்பட்டதால், இன்வெர்ட்டர் மூலம் லைட்கள், மின் விசிறிகள் இயங்கியதால் ஏக இரைச்சல். என்ன பேசுகிறார்கள் என்பது புரியாமல், பத்திரிகையாளர்களும் வழக்கறிஞர்களும் திணறி னார்கள். அடிக்கடி மின் விசிறியை ஆஃப் செய்து, கேட்க வேண்டிய அளவுக்கு நிலைமை இருந்தது.
முதல் சாட்சியாக வந்தவர் ஆனந்த் சுப்பிரமணியம். மும்பைக்காரான சுப்பிரமணியம், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொடங்கப்பட்ட கதையைக் கூற, இவர் வந்தார். ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் நிதி சுமார் 900 கோடி வரை 2007 மே, ஜூன் மாதங்களில் ஸ்வான் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதற்கான நான்கு காசோலைகளில் இவரும் இவரோடு பணியாற்றிய மற்றொருவரும் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். இவர்களிடம், 'ஸ்வான் நிறுவனத்தின் கணக்கு யாருடைய உத்தரவால் தொடங்கப்பட்டது? பணத்தைக் கொடுக்கச் சொன்னது யார்?’ என்று குறுக்கு விசாரணையில் கேட்கப்பட்டது.
ஆனந்த் சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டெல்லிப் பொது மேலாளர் சேதுராமன் இரண்டாவது சாட்சியாக ஆஜரானார். தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் நீண்ட வருடங்களாக அம்பானிகளோடு இருப்பவர். ஸ்வான் டெலிகாம் உரிமங்களுக்கான விண்ணப்பத்தில் இவர் கையெழுத்து போட்டு இருப்பதால், சாட்சியாக இவர் விசாரிக்கப்பட்டார். இவரும், 'நான் ஸ்வான் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டது உண்மை. ஆனால் ரிலையன்ஸுக்கு அந்த டெலிகாம் வட்டங்களில் உரிமம் இருந்ததா என்பது தெரியாது’ என்றார். முதல் நாள் அரைகுறையாக விசாரிக்கப்பட்ட இவர், கடந்த 14-ம் தேதி மீண்டும் சாட்சியம் அளிக்க வந்தார். அன்றைய தினமும் இவரிடம் மட்டுமே முழு விசாரணை நடைபெற்றது. அதனால், மூன்றாவது சாட்சியாக அழைக்கப்பட்டு இருந்த டி.பி. எடிஸலாட் நிறுவன அதிகாரி வினோத் குமார் புத்திராஜ் இரண்டு நாட்களிலும் விசாரிக்கப்படவில்லை.
ஆ.ராசா சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை மறுப்பதற்கு, ப.சிதம்பரம் விவகாரத்தையே காரணமாகச் சொல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட், சிதம்பரத்திடம் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே, வழக்கை எப்படிக் கொண்டுசெல்வது என்று முடிவு எடுக்க இருக்கிறதாம் ராசா தரப்பு. அதனால்தான் விசாரணையைத் தள்ளிப்போடவும் முயற்சி செய்தார்கள்.
நீரா ராடியா, ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பா ராவ், தயாளு அம்மாள் ஆகியோர் விரைவில் சாட்சியம் அளிக்க வர இருப்பதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
- சரோஜ் கண்பத்
No comments:
Post a Comment