''சமீபத்தில் ஒரு வீட்ல இருந்து துர்நாற்றம் வந்துச்சு. பூட்டை உடைச்சிட்டுப் போய்ப் பார்த்தா, ஒரு மூலையில போர்வைக்குள்ள முடங்கிக் கிடந்தாங்க வயசான ஒரு அம்மா. 90 வயசாச்சும் இருக்கும். போர்வையை உடம்புல இருந்து பிரிக்கக்கூட முடியலை. பஞ்சு பஞ்சா பிஞ்ச சதையோட போர்வை ஒட்டிக்கிடந்துச்சு. அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு, அவங்க யாருன்னு விசாரிச்சா, வசதியானவங்களாம். கம்யூனிஸ்ட் போராளியா ஜெயிலுக்கு எல்லாம் போயிருக்காங்க. வயசான பிறகு அவங்களைப் பராமரிக்கச் சங்கடப்பட்டு, அப்படித் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்களாம். என்ன புள்ளைங்களோ?''
- இதுவும் இன்னமுமாகப் பல சோகக் கதைகளைப் பகிர்ந்துகொள்ளும் முருகன், ஓர் ஆட்டோ டிரைவர். 'தெருவின்டே சப்தம்’ என்று இவர் எழுதிய புத்தகம் முழுக்க ஹ்யூமன் ஸ்டோரிகளால் நிரம்பி வழிகிறது. முருகனின் 'போட்டோ ரிக்ஷா’வும் கேரளம் முழுக்கப் பிரபலம்!
முருகனின் ஆட்டோ முழுக்கத் தெருவில் வாழும் குழந்தைகளின் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும். செல்லும் இடம் எங்கும் அதைக் காண்பவர்களின் சிந்தனைகளை, எண்ணங்களைச் சில நிமிடங்களுக் கேனும் இழுத்துப் பிடித்து நிறுத்தும்!
''நான் பிறந்தது தமிழ்நாட்டில் செங்கோட்டைப் பக்கம். குடிப் பழக்கத்தால் என் அப்பா இறந்து போக, அம்மாதான் என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. ஒரு தங்கச்சி. அம்மாவுக்கு நாமளும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு ஆறு வயசுலயே தெருவுக்கு வந்துட்டேன். தெருன்னா... தெருவேதான்!
சாப்பிடுறது, தூங்கறது, விளையாடுறது எல்லாமே தெருவில்தான். ஹோட்டல்ல இருந்து வீசப்படும் எச்சில் இலைகளை அடிச்சுப் பிடிச்சுச் சாப்பிடுவேன். மார்க்கெட் தரையில சிந்திச் சிதறிக்கிடக்குற காய்கறிகளை ராத்திரி போய்ப் பொறுக்கிட்டு வந்து வீட்ல கொடுப்பேன். வீட்டுக்கு என் முதல் சம்பாத்தியம்னா, அதுதான்.
10 வயசு வரைக்கும் அப்படித்தான் போச்சு. அப்போ கடவுள் மாதிரி வந்தார் மவுரிஸ் ஃபாதர். என்னை மாதிரி ஆதர வற்ற பலரைத் தன்னோடு அழைச்சுட்டுப் போய் தங்கவெச்சார். குளிக்கிறது, பல் விளக்குறதுனு அடிப்படையான விஷயங்களைக் கத்துக்கிட்டதே அங்கதான்.என்னைப் படிக்கவெச்சார். ஆனா, பாவம்... ஒரு கட்டத்துல இல்லத்தை நடத்தவே ஃபாதர் ரொம்ப சிரமப்பட, 'நம்மளால முடிஞ்ச உதவி’னு நினைச்சுக்கிட்டு திரும்பத் தெருவுக்கே வந்துட்டேன்.
மெக்கானிக் ஷாப்ல வேலை பார்த்தப்ப, ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டேன். அந்தச் சமயம்தான் 'சைல்டு லைன்’ல வேலைக்குச் சேர்ந்தேன். தெரு ஓரத்தில் இருக்கும் குழந்தைகளைக் காப்பகத்துல சேர்க்கிறதுதான் என் வேலை. என்னால முடிஞ்ச வரை நிறையக் குழந்தைகளைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டேன்.
அப்போ கிடைச்ச நல்லவங்க அறிமுகம் மூலமா, டிஜிட்டல் கேமராவும் லேப் டாப் பும் கிடைச்சது. ஆட்டோ ஓட்டி சம்பாதிச் சதைவெச்சு தெருவில் வசிப்பவர்களுக் காக 'தெருவோர ப்ரவர்தக்கா அசோசி யேஷன்’ அமைப்பைத் தொடங்கினேன். கையில கேமரா இருந்ததால், கண்ல தட்டுப்படுற வித்தியாசமான காட்சிகளைப் படம் எடுக்கும் பழக்கம் தொத்திக்கிட்டது. ஒரு முறை லாரி டயருக்கு அடியில ஆறு மாச சிசுவைப் படுக்கவெச்சுட்டு, பெத்த வங்க பக்கத்துல ரோடு போடுற வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அதைப் படம் எடுத்தபோதுதான், இப்படி ஆதரவு இல்லாம தெரு ஓரத்தில் விடப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை கேமராவில் பதிவு பண்ணணும்னு தோணுச்சு.
பல மாதங்கள் அப்படிப் படங்கள் எடுத்ததில் குழந்தைகளைப்பத்திக் கவலைப்படாத இந்தியச் சமூகத்தின் நிஜ முகம் கண்ல தட்டுப்பட்டது. 'ஐ.எஸ்.ஐ. முத்திரை தேவைப்படாத இந்திய ஏழைக் குழந்தைகள்’னு சொல்லி, உலகத் துக்குக் காட்டணும்னு ஒரு கோவம் வந்துச்சு. அந்தபுகைப்படங்களை வெச்சு ஒரு கண்காட்சி நடத்தலாம்னு நினைச்சேன். இடம் கிடைக்கலை. 'நம்ம ஆட்டோவுலயே மொபைல் எக்ஸிபிஷன் நடத்துவோம்’னு முடிவு எடுத்தேன். அப்படித்தான் இந்த 'போட்டோ ரிக்ஷா’ ஐடியா கிடைச்சுது. படங்களை ஆட்டோவில் ஒட்டிவெச்சுக்கிட்டு கேரளா முழுக்க வலம் வந்தேன். நிறையப் பேர் பார்த்தாங்க. சிலர் கிட்ட வந்து பேசினாங்க. ஒண்ணு, ரெண்டு பேர் 'இந்த நிலைமைக்கு யார் காரணம்?’னு யோசிக்க ஆரம்பிச்சாங்க. இந்தச் சிந்தனை ஒவ்வொருத்தர் மனதிலும் மாற்றத்தை உண்டாக்கணும். அதுதான் என் ஆசை!
என் புகைப்படம் ஒண்ணுக்கு தேசிய அளவில் விருது கிடைச்சுது. பல பத்திரிகைகளில் இருந்து போட்டோ ஜர்னலிஸ்ட் வேலைக்குக் கூப்பிட்டாங்க. ஆனா,புகைப் படக்காரன்கிறதைக் காட்டிலும் சமூகப் பணியாளனாத்தான் என்னை முன்னிறுத் திக்க விரும்புறேன்!''
- முருகனின் வார்த்தையில் தொனிக்கும் ஈரம் அவரது விழிகளிலும் பிரதிபலிக்கிறது!
- ஆனந்த விகடன்
No comments:
Post a Comment