Wednesday, November 23, 2011

இது நல்ல அரசுக்கு அழகல்ல.

உயர்த்தப்பட்ட பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் அறிவித்திருப்பது ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியல்ல. பாதிக்கப்படும் மக்களுக்கு அரைநாள் அவகாசம்கூட அளிக்காமல் கொரில்லா தாக்குதல் போல அதிவேகமாக அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டு உயர்வை அமல்படுத்தியிருப்பது மனதை உறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இது வந்திருக்கிறது.

தேவையான கட்டணத்தை மட்டும் கையில் வைத்துக் கொண்டு பஸ் ஏறிய ஏழை குடும்பங்கள் வீடு திரும்ப முடியாமல் பாதிவழியில் அவதிப்பட்ட காட்சிகள் முதல்வரின் உள்ளத்தை தொடவில்லை. நலிந்த மக்களின் சோகத்தை காட்டிலும் பொதுத்துறை நிறுவனங்களின் நலிவு அவரை கவலைகொள்ள செய்வது அறிக்கையில் தெரிகிறது.
விலை கட்டணம் உயர்த்தாத ஒரே காரணத்தால்தான் ஆவின் நிறுவனமும் போக்குவரத்து கழகங்களும் நலிந்த நிலைக்கு வந்துவிட்டனவா என்று தெரிந்துகொள்ள மக்கள் ஆவலாக இருக்கின்றனர். பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாததால் தேசிய பால் வள வாரியத்திடம் இருந்து 120 கோடி ரூபாய் மானியம் தமிழகத்துக்கு மறுக்கப்பட்டுள்ளது; அது வந்திருந்தால் ஆவின் நஷ்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

தனியார் விலைப் பட்டியலை பார்க்கும்போது வெண்ணெய், நெய், கோவா போன்ற பால் பொருட்களின் விலையை இன்னும் உயர்த்த இடமிருக்கிறது. பால் அத்தியாவசிய பொருள் என்றான நிலையில், குறைந்த வருமானக்காரர்களுக்கு ரேஷன் மூலமாவது நியாயமான விலையிலும், மற்றவர்களுக்கு சந்தை விலையிலும் பால் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
இதே போல போக்குவரத்து துறையிலும் பஸ்களின் தரம் வாரியாக கட்டணம் நிர்ணயிக்கலாம். அரசியல் காரணங்களால் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் நியமனம், பராமரிப்பின்மை போன்ற நிர்வாக சீர்கேடுகளை சரி செய்தால் நஷ்டத்தை நிச்சயமாக தவிர்க்க முடியும். என்னதான் தனியார் மிரட்டினாலும் ஆவின் பாலுக்கும் அரசு பஸ்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் மாற்று வழிகள் சாத்தியமே. மேல்தட்டு மக்களுக்காக பாடுபடும் பத்திரிகைகளின் பாராட்டுகளை நம்பி சராசரி மக்களின் நம்பிக்கையை இழப்பது நல்ல அரசுக்கு அழகல்ல.

No comments:

Post a Comment