Saturday, November 12, 2011

பொன்முடிக்கு சிக்கல் மேல் சிக்கல்!

ஜவ்வாக இழுக்கும் ஜாமீன் விவகாரம்



'நில அபகரிப்பு வழக்கில் கைதானவர்களில் யாரை வெளியேவிட்டாலும், பொன் முடியை மட்டும் விடவேகூடாது’ என்பதில் போலீஸ் தீவிரமாகி இருப்பதைப் போலவே தெரிகிறது!

பொன்முடி சிக்கிக் கொண்டதற்குக் காரணமான வழக்குகளின் விவரம் இதுதான்...

2007-ம் ஆண்டு விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தந்தை பெரியார் நகரில் போக்கு வரத்து ஊழியர்களுக்காக வீடு கட்டிக்கொடுக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஊழியர்களின் பி.எஃப். பணத்தில் இருந்து 393 ஊழியர்களுக்கு வீடும் கட்டப்பட்டது. இதுபோன்ற குடியிருப்புகள் ஏற்படுத்தும்போது பூங்கா, பள்ளிக்கூடம், மைதானம், சமுதாய நலக்கூடம் போன்றவை அமைக்கப்படும். பொது மக்களுக்காக ஒதுக்கப்படும் இதுபோன்ற இடத்தை விற்கவோ, வாங்கவோ கூடாது என்பது விதிமுறை. இதற்காக ஒதுக்கப் பட்ட நிலத்தை அடிமாட்டு விலைக்கு, பொன்முடிக்குச் சொந்தமான 'சிகா அறக்கட்டளை’ மிரட்டி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகஸ்ட் 31 அன்று, போலீஸார் பொன்முடியைக் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதன் பிறகு பொன்முடி தரப்பில் இருந்து மூன்று முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தும், வரும் 18-ம் தேதி வரை அவருக்குக் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கைது
செய்யப் பட்ட தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் பலருக்கும் ஜாமீன் கிடைத்து வரும் நிலையில், பொன்முடிக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் அரசியல் வட்டார பரபரப்பு. காரணத்தை அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித் தோம். ''அந்தக் காலத்தில் பேராசிரியராக இருந்த பலரும் இன்றும் வாடகை வீட்டில்தான் இருக்கிறார்கள். பொன்முடியும் பேராசிரியராக இருந்தபோது ஒரு சைக்கிளில்தான் பவனி வருவார். இன்று விழுப்புரத்தில் கல்லூரி நடத்துவதற்காக பல ஏக்கர் நிலத்தை வசப்படுத்தி உள்ளார். இதுபோக, பழக்கடை, ஜூஸ் கடை, ஐஸ் க்ரீம் கடை, அறக்கட்டளை என்று பல முதலீடுகள் இருக்கின்றன. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அவரால் எப்படி இவ்வளவு சொத்துக்களை வாங்கிக் குவிக்க முடிஞ்சது?

அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் சட்டசபையில, பொன்முடிதான் அதிகமாக அரசுக்கு நெருக்கடி கொடுப்பார். 'அந்தப் புள்ளிவிவரம் வேண்டும், இந்தத் திட்டத்தின் நிலைமை என்ன?’ என்று கேட்டு நச்சரிப்பார். இதுபோக, அண்மையில் திருவாரூரில் நடந்த கூட்டத்தில் சகட்டுமேனிக்கு முதல்வர் ஜெய லலிதாவை வசைபாடினார். தி.மு.க-வில்உள்ள பெரிய தலைகள்கூட, ஜெயலலிதாவை மரியாதைக் குறைவாகப் பேசமாட்டார்கள். இதுதான் மேலிடத்தில் கோபம் ஏற்படக் காரணம். யாருக்கு ஜாமீன் கிடைத்தாலும் பரவாயில்லை, பொன்முடி வெளியே வந்துவிடக் கூடாது என்று திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள்.

தற்போது நில ஆக்கிரமிப்பு, முதல்வரை அநாகரி மாகப் பேசியது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவரை சாதி பெயரைச் சொல்லித் திட்டியது என்று மூன்று வழக்குகள் அவர் மீது உள்ளன. இரண்டில் ஜாமீன் கிடைத்துவிட்டாலும், நில அபரிகப்பு வழக்கில்தான் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஒருவேளை, ஜாமீன் கிடைத்தாலும் அடுத்ததாக அவர் மீது ஒரு வழக்கைப் பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக் கின்றனர்'' என்றனர்.

மேலும் அவர்கள் பேசுகையில், ''கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் விழுப்புரம், விழுதரெட்டியில கலைஞர் அரங்கம் கட்டடத் திறப்பு விழா நடத்தினார் பொன்முடி. அந்த நிலத்தில் அப்போது ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த மதுரக்கண்ணன் என்பவர் வாடகைக்கு டீ கடை நடத்தினார். அவரை மிரட்டி, கடையைக் காலி செய்துதான், அந்த இடத்தை வாங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல், அந்தக் கட்டடமும் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாகவும் பேச்சு இருக்கிறது. அதேபோன்று விக்கிரவாண்டியில் பொன்முடிக்குச் சொந்தமான சூர்யா காலேஜுக்குப் பின்புறமும் அரசு நிலத்தை அபகரித்து இருப்பதாகத் தெரிகிறது. இந்த இரண்டு கேஸும் அவர் மீது அடுத்தடுத்துப் பாய இருப்பதால், இனிமேல் அவரால் ஜாமீனில் வெளிவருவது முடியவே முடியாது'' என்றார்கள்.

பொன்முடியின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ''எங்கள் மாவட்டச் செயலாளர் இன்னும் சிலநாளில் கண்டிப்பாக வெளியே வந்து விடுவார். கடைசியாக ஜாமீன் மனு விசாரணை நடைபெற்றபோது, 'நான் இதய நோயாளி. சிறையில் டாக்டர்கள் எனக்கு பிரஷர் மட்டுமே செக்கப் செய்கின்றனர். சிறை சாப்பாடு காரணமாக எனது உடம்பு மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே, எனக்கு இதயப் பரிசோதனையும் செய்ய வேண்டும்’ என உயர் நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார். இப்போது வழக்கில் எங்களுக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் விரைவில் ஜாமீன் கிடைக்கும். புதுப்புது வழக்குகள் போட் டாலும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்'' என்று அடித்துச் சொல்கின்றனர்.

தி.மு.க-வினர் என்னதான் நம்பிக்கையுடன் பேசினாலும் பொன்முடிக்கு சிக்கல் நீடிப்பதுதான் நிஜம்.

- அற்புதராஜ்,

No comments:

Post a Comment