சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு’ என்ற ஆக்டோபஸ் கரங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் கொடுத்தது, அது இந்தியா முழுவதும் விவசாயிகள், வியாபாரிகள் மத்தியில் அனலை மூட்டியிருக்கிறது
பன்னாட்டு கம்பெனிகளைப் பொறுத்தவரை ஒரே நிறுவனத்தின் பொருட்களை விற்பதற்கு நூறு சதவிகிதமும் பல நிறுவனத்தின் பொருட்களை சூப்பர் மார்க்கெட்டில் விற்பதற்கு 51 சதவிகித அனுமதியையும் வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இதன்மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் அரசு இதற்கு சொல்லும் காரணம்.
ஆனால், வால்மார்ட், டெஸ்கோ, மெட்ரோ எனப் பல பன்னாட்டு கம்பெனிகள் சில்லறை வர்த்தகத்தில் கால் வைத்தால் இந்தியா முழுவதும் இவ்வர்த்தகத்தில் ஈடுபட்டி ருக்கும் முப்பது கோடிக்கும் மேலானவர்கள் பாதிப்படைவார்கள். அதன்தொடர்ச்சியாக பல லட்சம் பேர் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுவார்கள்’ என எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்களும், வணிகர் சங்கப் பிரதிநிதிகளும்.
இதுபற்றி விரிவாகவே பேசினார் ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்கள்’ பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா.
“அந்நிய முதலீடு என்றால் என்னவென்றே இன்னமும் பொதுமக்களுக்கும், வியாபாரிகள் பலருக்கும் புரியவில்லை. ஆரம்பத்தில் நம் ஊர் குளிர்பானங்களை விட குறைந்த விலைக்கு வந்த வெளிநாட்டு குளிர்பானங்களின் இன்றைய விலை என்ன என்று பார்த்தாலே தெரிந்துவிடும். அதுமட்டுமல்ல, இன்று உள்ளூர் கம்பெனிகளும் அடியோடு காணாமல் போய்விட்டன. நமது ஊர் தண்ணீரில் குளிர்பானம் தயாரித்து அவர்கள் நாட்டுக்கு கோடி கோடியாக பணத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள். நம்மூர் கு ளிர்பானத்துக்கு வந்த கதைதான் இனி மற்ற பொருட்களுக்கும் வரப் போகிறது.
அந்நிய நிறுவனங்களில் ஒன்றான ‘வால்மார்ட்’ நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு 18 லட்சம் கோடி ரூபாய்! இந்தத் தொகையை நமது வணிகர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இருபது லட்சம் வணிகர்களும், அவர்களைச் சார்ந்து ஒரு கோடித் தொழிலாளர்களும் உள்ளனர். இந் தியா முழுவதும் 21 கோடிப் பேர்சிறு, குறு தொழில்களை நம்பியுள்ளனர்.சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு கம்பெனிகளை அனுமதிப்பதால், இவர்கள் அத்தனை பேரும் வேலை இழப்பார்கள்.
வால்மார்ட் கம்பெனியால், ‘இருபது லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்’ என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா சொல்கிறார். 21 கோடி பேரை அழித்துவிட்டு இருபது லட்சம் பேருக்கு வேலை கொடுப்பது நியாயமா?
சீனாவில் வால்மார்ட் நூறு சதவிகிதம் வெற்றி என்கிறார்கள். ஆனால், கடந்த மூன்று மாதங்களில் அங்கே உள்ள பல வால்மார்ட் நிறுவனங்களுக்கு சீல் வைத்துவிட் டார்கள். ஃபிரான்ஸ் உள்பட 14 நாடுகள் வால்மார்ட் உள்ளிட்ட கம்பெனிகளால் கடுமையான பொருளாதார சீரழிவைச் சந்தித்து விட்டன.
மத்திய அரசின் இந்த உத்தரவு திரும்பப் பெறப் பட வேண்டும். வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவாக தமிழக அரசு முடிவெடுத்திருப்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக் கிறது. மத்திய அரசின் முடிவைக் கண்டித்து டிசம்பர் ஒன்றாம் தேதி கடையடைப்புப் போராட்டமும், அதைத் தொடர்ந்து தீவிர போராட்டங்களையும் நடத்த உள்ளோம்’’ என்றார் கொந்தளிப்போடு.
மத்திய அரசின் முடிவால் விவசாயிகளும் பெரும் கோபத்தில் உள்ளனர். அரசின் முடிவால் “விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் முப்பது கோடிப் பேர் வேறு பிழைப்பைத் தேடி ஓட வேண்டியிருக்கும்’’ என எச்சரிக்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கந்தசாமி.
“தோட்டக் கலையிலும், வேளாண் துறையிலும் பன்னாட்டு கம்பெனிகளை அனுமதித்ததன் விளைவாக பல விவசாயிகள் நிலங்களை அவர்களிடம் விற்றுவிட்டு அவர்களிடமே வேலைக்குப் போய் விட்டார்கள். இந்தியா போன்ற விவசாய நாடுகளில் இதுபோன்ற முடிவுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இப்போதே நமது ஊரில் அமெரிக்க ஆப்பிள் கிலோ 150 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதுவே உள்ளூர் ஆப்பிள் கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது என அரசு சொல்கிறது. உள்ளூர் உற்பத்திப் பொருட்களை குறைந்த விலைக்கும், வெளிநாட்டுப் பொருட்களை அதிக விலைக்கு விற்கலாம் என்பதுதான் அரசாங்கத்தின் சட்டமே. இது எவ்வளவு பெரிய அநியாயம்? நேரடி கொள்முதலில் வால்மார்ட் ஈடுபட்டால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பது வெறும் வாய்வார்த்தை மட்டும்தான்.
இதுவரை வந்துள்ள பன்னாட்டு கம்பெனிகளால் உயிரை விட்ட விவசாயிகள்தான் ஏராளம். மத்திய அரசின் விவசாய கொள்கை மாற வேண்டும். விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஒரு முயற்சியாக வால்மார்ட் உள்ளே நுழைகிறதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு வலுவாக உண்டு. அவ்வளவு எளிதில் பன்னாட்டு கம்பெனிகள் கால் வைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று ஆவேசப்பட்டார் கந்தசாமி.
நோய் தீர்க்கும் மருந்தைக் கண்டுபிடிக்காமல் மக்கள் வாயில் விஷத்தை ஊற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமே ஆன் லைன் வர்த்தகம் என்ற ஊக வணிகச் சூதாட்டம்தான். முதலில் இதைத் தடை செய்தாலே விலைவாசியைப் பெருமளவு குறைக்க முடியும். அடுத்து தவறான ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை. நம்மூரில் உள்ள எண்ணெய் வித்துக்களை ஊக்குவிக்காமல் இன்னமும் பாமாயில், சோயா எண்ணெய்யை மட்டுமே நம்பியிருக்கிறோம். வெளிநாடு களுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்கிறோம்.
நமக்கு தட்டுப்பாடு என்றதும் அங்கிருந்தே இறக்குமதி செய்கிறோம். பாகிஸ்தானுக்கு லடாக் வழியாக வெங்காயம் ஏற்றுமதி செய்கிறோம். நமக்கு தட்டுப்பாடு வந்ததும் அங்கிருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தை கிலோ 120 ரூபாய்க்கு விற்றோம். இதற்குக் காரணம் முறையாகத் திட்டமிடாததுதான். இதையெல்லாம் சரி செய்யாமல் வெளிநாட்டு கம்பெனிகளை உள்ளே நுழைய அனுமதிப்பது மீண்டும் நம்மை இன்னொரு கூட்டம் அடிமைப்படுத்த வழி ஏற்படுத்திக் கொடுப்பது போலத்தான்’’ என எச்சரிக்கை மணியடிக்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் தா.வெள்ளையன்.
இப்போதைக்கு தமிழகத்தை யும் சேர்த்து பதினொரு மாநிலங்கள் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்க்கின்றன. அந்த வகையில் அது வணிகர்கள், விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது.
இருந்தாலும் பலவான் வகுத்ததே சட்டம் என்ற கதையாக பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்துவிட்டால் சாதாரண மளிகைக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளுக்கு அது மரண ஆபத்தாகத்தான் இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே உள்ளூர் நிறுவனங்கள் பல செயின் ஸ்டோர்களை நிறுவி ஷாப்பிங் அனுபவத்தை வேறு விதமாக மாற்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அடுத்து பன்னாட்டு நிறுவனங்களும் வந்துவிட்டால் நிலைமை இன்னும் சிக்கல்தான் என் கிறார்கள்.
No comments:
Post a Comment