Tuesday, November 22, 2011

அடியாட்களைக் கொண்டு மிரட்டினாரா அண்ணாச்சி?

நில மோசடிப் புகார் உள்ளிட்ட பல வழக்குகளில் தி.மு.க. மாஜி மந்திரிகள் பலர் கம்பி எண்ணிக்கொண்டு இருக்க, பல புகார்கள் கிளம்பிய நிலையிலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மட்டும் எப்படியோ தப்பிவந்தார். இப்போது குமாரபாளையத்தில் இருந்து அவர் மீது ஒரு நில மோசடி வழக்கு திடீரெனப் பாய்ந்து இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர், பிரபல ஸ்பின்னிங் மில் அதிபர் ஜே.கே.கே. நடராஜன். பள்ளி மற்றும் கல்லூரிகளையும் நடத்திவரும் நடராஜன், அவரது தாயார் ரங்கம்மாள் பெயரில் டிரஸ்ட் ஒன்று தொடங்கி நிர்வகித்து வந்தார். நடராஜன் - தனலட்சுமி தம்பதிக்குக் குழந்தை இல்லாததால், அவரது அண்ணன் மகள் செந்தாமரையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். மகள் செந்தாமரைக்கு திருப்பூர் தொழிலதிபர் கிருஷ்ணராஜைத் திருமணம்செய்து​வைத்து, ராஜபாளையம் அழகப்பா காட்டன் மில்லை நிர்வகிக்கும் பொறுப்​பை மகள், மருமகனிடம் ஒப்படைத்தார்.

நடராஜன் இறந்த சில நாட்களில் ராஜபாளையம் சப்-ரிஜிஸ்தார் அலுவலகத்தில் ஓர் உயிலைப் பதிவு செய்தார் செந்தாமரை. அதில், 300 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடங்கிய ரங்கம்மாள் டிரஸ்ட்டின் நிர்வாக இயக்குனராக வளர்ப்பு மகள் செந்தாமரையை, தொழிலதிபர் நடராஜன் நியமித்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், 'அந்த உயில் போலியானது. செந்தாமரை அவரது கணவர் கிருஷ்ணராஜ் மற்றும் கார் டிரைவர் பழனி முருகன் ஆகியோர்போலியாக ஓர் உயிலைத் தயாரித்து மோசடி செய்துள்ளனர்’ என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸில் புகார் செய்தார் நடராஜனின் மனைவி தனலட்சுமி.

அவரிடம் பேசினோம். ''ரங்கம்மாள் டிரஸ்ட்டை என் கணவர் நடராஜனும் நானும்தான் ஆரம்பித்தோம். ஆரம்பம் முதலே வேறு யாரும் அந்த டிரஸ்ட்டில் மெம்பராக இல்லை. உயில் தொடர்பாக பிரச்னை வந்தவுடன்தான், கார் டிரைவர் பழனிமுருகன் மூலம் இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலையிட்டார். இன்று வரை அவர் டிரஸ்ட் மெம்பராகத் தொடர்வதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

விருதுநகரில் இருந்து ஏராளமான அடியாட்​களைக் கொண்டுவந்து மிரட்டுவது, பொய் வழக்குப் போடுவது என்று பல பிரச்னைகள் செய்தனர். உயிருக்குப் பயந்து பங்களாவைவிட்டு வெளியேறி, இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். இந்தப் பிரச்னையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். தலையிடவில்லை என்றால், பிரச்னை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். எங்கள் கல்வி நிறுவனங்களின் சொத்துக்களை ஈரோடு வங்கி​யில் அடமானம் வைத்து 20 கோடி கடன் வாங்கியிருக்கிறார் செந்தாமரை. அப்போதே போலீஸில் புகார் செய்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். இப்போது நாமக்கல் போலீஸார், வளர்ப்பு மகள் செந்தாமரை, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மற்றும் பழனிமுருகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இனிமேலாவது நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய செந்தாமரை, ''எங்க அம்மா (அப்படித்தான் அழைக்கிறார்
)
தனலெட்சுமிக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு சில உறவினர்கள்தான் அம்மாவைத் தூண்டிவிடுகிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆருக்கும் அப்பாவுக்கும் தொழில்ரீதியாக நல்ல நட்பு உண்டு. அதனால் நல்லபடியாக டிரஸ்ட்டைக் கவனிக்க வேண்டும் என்றுதான் அப்பாவே, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரை நியமித்தார். ஆனால் அவர் இரண்டு வருடங்கள் மட்டுமே மெம்பராக இருந்தார். சர்ச்சை எழுந்ததுமே விலகிவிட்டார். உயில் பிரச்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் உள்ளது. டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் என்ற அடிப்படை உரிமையில்தான், கடன் வாங்கி இருக்கிறேன். மொத்தமே 3 கோடி வாங்கி,

1 கோடியை அடைத்தும்​விட்டேன். அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாகத்தான் முன்னாள் அமைச்சரை உள்ளே இழுத்து வழக்கு போட்டுள்ளார்கள்'' என்றார்.

முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்​சந்திரனைத் தொடர்பு கொண்டபோது, ''எனக்கும் நடராஜனுக்கும் நீண்ட காலப் பழக்கம். அந்த அடிப்படையில்தான் அந்த டிரஸ்ட்டில் மெம்பராக நியமித்திருந்தார். நடராஜன் இறந்த பிறகு யார் வாரிசு என்பதில் பிரச்னை ஏற்பட்டது. செந்தாமரை மற்றும் தனலட்சுமியிடம் சமாதானம் பேசினேன். ஆனால் தனலட்சுமியம்மாள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்குப் பிறகு பல அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் பஞ்சாயத்துப் பேசியும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. அதனால் டிரஸ்ட்டில் இருந்து நான் விலகிவிட்டேன்'' என்றார்.

இப்போது நாமக்கல் போலீஸார் விருதுநகரில் முகாமிட்டு அண்ணாச்சியின் வீடு மற்றும் ஸ்பின்னிங் மில்லில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுக்காக தி.மு.க. நடத்திய போராட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. ''கைது பயத்தில்தான் ஆப்சென்ட் ஆகிவிட்டார்'' என்று பீதியைக் கிளப்பியபடி விருதுநகரில் வலம் வருகிறது போலீஸ்!

No comments:

Post a Comment