ஜெயலலிதா அரசுக்குத் தீர்க்க முடியாத தலைவலிகளில் ஒன்று கேபிள் பிரச்னை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அதிரடியாக அரசு கேபிள் அமலுக்கு வந்தது. உள்ளூர் சேனல்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில், சத்தம் இல்லாமல் உள்ளூர் சேனல்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப் பட்டது. இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 20 லோக்கல் சேனல்கள் புற்றீசல்போல முளைத்துவிட்டன!
''இரண்டு மாசத்துக்கு அஞ்சு லட்ச ரூபாய் வரை அட்வான்ஸாக டி.டி வாங்கிட்டு, உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்தாங்க. எந்த வரைமுறையும் இல்லாம, உள்ளூர் சேனல்களுக்கு எப்படி அனுமதி கொடுத்தாங்கன்னு தெரியலை. ஒவ்வொரு சேனலிலும், ஒளிபரப்பும் பாடல் களுக்கு யாருமே காப்பிரைட்ஸ் வாங்கவே இல்லை. அப்படி வாங்காம ஒரு பாட்டை சேனலில் ஒளிபரப்பினா, அடுத்த நாளே வக்கீல் நோட்டீஸ் வந்துடும். ஆனா, இரண்டு நாளைக்கு முன்னாடி சேலத்தில் ஒரு லோக்கல் சேனலில் 'எங்கேயும் எப்போதும்’ படமே முழுசா ஓடி இருக்கு. இதுக்கு யார் அனுமதி கொடுத்தாங்க?
இன்னொரு சேனலில் 'சூப்பர் ஸீன்ஸ்’ என்ற பெயரில் 'வேலாயுதம்’ படத்தை மூணு பகுதிகளாப் போட்டு முடிச்சுட்டாங்க. இதை யார் தட்டிக் கேட்க முடியும்? செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என்று மட்டும் தடை விதிச்சிருக்காங்க. இப்படி அனுமதி இல்லாமல் படத்தையும் பாட்டையும் ஒளிபரப்புவதை எப்படி அரசாங்கம் அங்கீகரிக்குது? இதை ஒழுங்குபடுத்தணும். பெரும்பாலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவங்கதான் இப்படிப் புதுசு புதுசா லோக்கல் சேனல்களைத் தொடங்கி இருக்காங்க. ஆளும் கட்சிக்காரங்க என்பதால், லோக்கல் சேனல்களை முழுசா அபகரிக்க நினைக்கிறாங்க. எதிர்த்துக் கேட்க யாரும் இல்லை.
இப்போ மாவட்ட கலெக்டர் மூலமாக டெண்டர் விட்டு யார் அதிக தொகைக்கு கேட்கிறாங்களோ... அவங்களுக்கு உள்ளூர் சேனல் நடத்த அனுமதி கொடுக்கப்போறதா சொல்றாங்க. அதை முன்னாடியே செய்ய வேண்டியதுதானே!'' என்கிறார்கள் முன்பு லோக்கல் சேனல் நடத்தியவர்கள்.
''அரசு கேபிளுக்கு மாதக் கட்டணமாக 70 நிர்ணயம் செஞ்சிருக்காங்க. அதில், சன் டி.வி. வராது என்பதால்... மக்களுக்கு ரொம் பவே அதிருப்தி. 'சன் டி.வி. இல்லைன்னா, கேபிள் கனெக்ஷனே வேண்டாம்’னு பல இடங்களில் மக்கள் சண்டை போட்டாங்க. அதனால், மக்களை சமாதானப்படுத்த
அரசு கேபிள் வைச்சிருக்கும் பலர், சொந்தமாக ஒரு டிஷ் வாங்கி அது மூலமாக சன் நெட்வொர்க் இணைப்புகளை அரசு கேபிளில் லிங்க் பண்ணிடுறாங்க. சன் டி.வி-யும் சேர்த்துக் கொடுக்கிறதால் மாதக் கட்டணம் 80-ல் இருந்து 100 வரை ஏரியாவுக்குத் தகுந்த மாதிரி வசூல் பண்றாங்க'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.
அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றிப் பேசினோம். ''இப்போது பரிசோதனை முயற்சியாகத்தான் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். சீக்கிரமே அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக டெண்டர் விடப்போகிறோம். யார் அதிகக் கட்டணம் செலுத்தி சேனல் நடத்தத் தயாராக இருக்கிறார்களோ... அவர்களுக்கு அனுமதி கொடுப்போம். ஒரு மாவட்டத்துக்கு 10 சேனல்கள் வரை அனுமதி கொடுக்கப்போகிறோம். உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டால், அவர்கள் விருப்பத்துக்கு எது வேண்டுமானாலும் ஒளிபரப்ப முடியாது. அதற்காக ஏழு விதிமுறை களை வகுத்திருக்கோம். செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என்பதுதான் முதல் விதி. காப்பிரைட் இல்லாமல் பாடல்களையோ, படக் காட்சிகளையோ ஒளிபரப்ப அனுமதி கொடுக்க மாட்டோம். அதனால், யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே லோக்கல் சேனலை நடத்த முடியும். அ.தி.மு.க-வினர் மட்டும்தான் லோக்கல் சேனல் நடத்துகிறார்கள் என்பது பொய்யான குற்றச்சாட்டு.
சில இடங்களில் அரசு நிர்ணயித்து இருக்கும் கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கும் தகவல் வந்தது. அப்படி யாராவது வசூலித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சன் டி.வி. இணைப்பை அரசு கேபிள் வழியாகக் கொடுத்துத் தொழிலைக் காப்பாத்திக்க சிலர் இப்படி செய்கிறார்கள். இனி அப்படி நடக்காது. நாங்களே சன் டி.வி-யோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். விரைவில் அரசு கேபிள் வழியாக சன் டி.வி-யும் கிடைக்கும். இதில் யாரும் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்'' என்றார் தெளிவாக.
No comments:
Post a Comment