'கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும்’ என்று மட்டுமே கோஷம் கேட்டு வந்த பகுதியில் இப்போது, 'அணு உலையைத் திறக்க வேண்டும்’ என்ற குரலும் கேட்கத் தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் தியாகியான சுடலைமுத்து, 'அணு உலைக்கு ஆதரவாக சாகும் வரை உண்ணாவிரதம்’ இருக்கப் போவதாக அறிவித்து இருப்பதுதான் புதிய பரபரப்பு.
கூடங்குளம் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மத்திய அரசு சார்பில் 15 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்களுடன் பேசுவதற்காக தமிழக அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி-யான விஜயேந்திர பிதரி, தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் இவான் அம்புரோஸ், யாக்கோபுபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ், போராட்ட குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் இடம் பெற்றனர்.
இரு குழுக்களும் நவம்பர் 8-ம் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்தியக் குழுவில் 10 பேர் கலந்துகொண்டனர். மாநில அரசு அமைத்த குழுவில், இவான் அம்புரோஸ் மட்டும் கலந்துகொள்ளவில்லை. 'அணு மின் உலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதனால், இந்தக் குழுவில் இடம்பெறுவது சரியாக இருக்காது. அத்துடன், என்னிடம் கேட்காமலே என்னைக் குழுவில் சேர்த்துவிட்டார்கள். ஆகவே, குழுவில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ என்று கடிதம் கொடுத்து ஒதுங்கிக்கொண்டார்.
இவான் அம்புரோஸ் விலகல் குறித்து, அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் விசாரித்த போது, ''அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பாதிரியார்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அத்துடன் தமிழக அரசு சார்பில் பிரதமரை சந்திக்கச் சென்ற குழுவிலும் ஆயர்கள், பாதிரியார்கள் இடம் பெற்று இருந்தார்கள். இதை விரும்பாத மத்திய அரசு, டெல்லியில் இருக்கும் போப்பின் தூதுவரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைத்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது, 'போராட்டத்தில் ஆயர்கள், பாதிரியார்கள் பங்கேற்றால், கல்வி நிறுவனங்கள் நடத்துவதிலும், சேவை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெறுவதிலும் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்’ என மிரட்டி இருக்கிறார்கள். அதனால் இவான் அம்புரோஸ் இந்தக் குழுவில் இடம்பெறுவதைத் தவிர்த்துவிட்டார்'' என்கிறார்கள்.
தமிழக அரசின் குழுவில், தங்கராஜ் என்பவர் எப்படிச் சேர்க்கப்பட்டார் என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள், போராட்டக் குழுவினர். இதுவரை போராட்டம் எதிலும் அவர் பங்கெடுத்தது இல்லை. அதனால் அவரைக் குழுவில் இருந்து நீக்கிவிட்டு, அறிஞர் ஒருவரை இடம்பெறச் செய்ய வேண்டும் என போராட்டக் குழுவினர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இரு குழுக்களுக்கும் இடையே நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை குறித்து, அதில் பங்கேற்ற புஷ்பராயனிடம் பேசினோம். ''நாங்கள் திறந்த மனதுடன் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோம். மத்திய குழுவினரிடம், கதிர்வீச்சு தொடர்பாக எங்கள் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் சந்தேகங்கள், அணு உலை குறித்த அச்சங்கள், எங்கள் வாழ்வாதாரப் பிரச்னைகள் என்று 50 கேள்விகளைக் கொடுத்து இருக்கிறோம். எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் தருமாறு கேட்டுள்ளோம். தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் பதில் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். இது தவிர, இந்தியா - ரஷ்யா ஒப்பந்தத்தின் விதிகள் என்ன என்பதையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வலியுறுத்தினோம். போராடும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் சந்தேகத்தைப் போக்குமாறு கேட்டோம். அனைத்தையும் பரிசீப்பதாக சொல்லி இருக்கிறார்கள். நல்லதே நடக்கும்'' என்றார் நம்பிக்கையுடன்.
மத்திய அரசின் வல்லுனர் குழுவின் தலைவரான முத்துநாயகம், ''தமிழக அரசு குழுவுடன் நடத்திய பேச்சு திருப்தியாக இருக்கிறது. 'மக்கள் நலன், நாட்டு நலன்’ என்கிற இரண்டு அம்சங்களை மட்டுமே மனதில்கொண்டு பேசினோம். அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகத்துக்கும் உரிய பதில் கொடுப்போம். எங்கள் குழுவினர் கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தைப் பார்வையிட்டு அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்து மக்கள் சந்தேகங்களைத் தீர்த்துவைப்போம்'' என்றார்.
பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணு உலைக்கு ஆதரவான மக்களை இயக்கம், இந்து தேசிய காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் தொண்டர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சுடலைமுத்து உள்ளிட்டோரும், 'அணு உலையை உடனே திறக்க வேண்டும்’ என்று கோஷங்களை எழுப்பினார்கள். அணு உலை வேண்டாம் என்ற போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் உதயகுமாரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யும்படியும் அவர்கள் கோஷமிடவே, அந்த இடமே களேபரமாக இருந்தது.
இந்த நிலையில், அணு உலையை நிரந்தரமாக மூடக் கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அறிவியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் 12-ம் தேதி யாத்திரை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளனர். ஆக, கூடங்குளம் பரபரப்பு இப்போதைக்குள் அடங்காது!
No comments:
Post a Comment