Friday, November 18, 2011

'வில்லங்க' விஜி!

ழுகார் உள்ளே நுழையும்போது, 'பொட்டு ரிலீஸ்’ என்ற செய்தி எஸ்.எம்.எஸ். வழியே குதித்து விழுந்தது! அதையே கழுகாரிடம் சொன்னோம். ''இரண்டு நாட்களாக போலீஸ் வட்டாரத்​தில் கேட்கும் புலம்பல் இதுதான். 'கோட்டைவிட்டதா போலீஸ்?’ என்று ஆட்சி மேலிடத்தில் இருந்து கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியா​மல் போலீஸ் உயர் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்!

''மதுரை மண்டலம் அண்ணன் அழகிரியின் கோட்டை என்றால், அதன் காரியதரிசி பொட்டு சுரேஷ். யார் கலெக்டர், யார் எஸ்.பி. என்பது முதல் யார் யாருக்கு கான்ட்ராக்ட் கொடுக்கலாம் என்பது வரைக்கும் முடிவு எடுக்கும் நபர். தகுதியான பலர் காத்திருக்க, இவரைக் கவனித்துவிட்டு ஈஸியாகப் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் பல்வேறு துறைகளிலும் இருக்கிறார்கள். தவிர, வெளியே வராத பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களும் இருந்தன. இதை மதுரைப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவே வெளிப்படையாகத் தாக்கினார்.''
''அதைத்தான் நாடறியுமே!''

''ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் பொட்டு சுரேஷைப் பொறிவைத்துப் பிடித்தார்கள் மதுரை போலீஸ் அதிகாரிகள். எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க், கமிஷனர் கண்ணப்பன், ஏ.டி.எஸ்.பி-யான மயில்வாகனன் ஆகிய மூவர் அணிதான் பொட்டுவைப் பதம் பார்த்தது. 'மதுரை ஜெயிலிலாவது போடுங்கள்’ என்ற பொட்டு தரப்பின் கோரிக்கையை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முத்துக்குமார் நிராகரிக்க, பாளைங்கோட்டையில் அடைக்கப்பட்டார் பொட்டு. அதன் பிறகு, வரிசையாக வழக்குகள் பாய்ந்தன. இதில் எதிலும் அவர் ஜாமீன் வாங்கிவிடக் கூடாது என்பதற்காக குண்டாஸும் பதிவு செய்தார்கள். ஓர் ஆண்டுக்கு வெளியே வர முடியாது என்று போலீஸார் தைரியமாக இருந்தனர்!''
''அதுதான் நிராசையாக ஆகிவிட்டதே?''
''பொட்டு சிறைக்குள் போய் 120 நாட்கள் தாண்டிவிட்டன. 'ஆள் ரொம்ப உடைஞ்சுட்டாராம்’ என்றெல்லாம் சொந்தக் கட்சியினரே பேசிக்கொள்ள, அத்தனை வழக்குகளையும் உடைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார் பொட்டு. 'போலீஸ் நடவடிக்கையில் நிறைய ஓட்டைகள் இருந்ததால், குண்டாஸை ஈஸியாக உடைத்துவிட்டார்கள்’ என்றார் ஒரு தி.மு.க. வக்கீல். நீதிபதிகள் சி.நாகப்பன், டி.சுதந்திரம் ஆகியோர், 'பொட்டு சுரேஷை குண்டர் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பித்த உத்தரவு, ஆவணங்களின் அடிப்படையில் இல்லை... அவை மேம்போக்கானவை என்பது தெரிகிறது.’ என்று சொல்லி போலீஸைத்தான் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இதுவே ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு கோபத்தைத் தூண்டி உள்ளது.''
''இந்த விவகாரத்தைக் கவனிக்கும் உயர் அதிகாரிகள் கடுமையான ஆட்கள்தானே?''

'மதுரை மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் சிலரைத் தவிர, 'எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகள் இப்போதும் பொட்டுவுக்கு விசுவாசமாகவே இருக்கிறார்கள்’ என்ற கருத்தும் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விவகாரம் இது. வாரப் பத்திரிகை நிருபர் பாண்டியனைத் தாக்கிய வழக்கில் பொட்டுதான் முதல் குற்றவாளி. ஒருவரைக் கைது செய்தால், அடுத்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட சுரேஷை


23-ம் தேதிதான் உசிலம்பட்டி நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தது போலீஸ். அன்று மாஜிஸ்திரேட் விடுமுறை என்பதால், வாடிப்பட்டி நீதிமன்றத்துக்கு அழைத்துப் போய், பொறுப்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இது தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவு இருப்பதைச் சுட்டிக்காட்டிய மாஜிஸ்தி​ரேட், காலதாமதமாகக் கொண்டு​வந்ததால், ரிமாண்ட் செய்ய முடியாது என்று மறுத்து​விட்டார். ஆக, ஜாமீன் வாங்காமலேயே அந்த வழக்கில் பொட்டு வெளியே வந்துவிட்டார். எனவே வழக்குப் போடுவது, கைது செய்வது முக்கியம் அல்ல. அதைக் கடைசி வரைக்கும் காப்பாற்ற போலீஸ் தவறிவிட்டதுதான் பொட்டு ரிலீஸுக்குக் காரணம் என்கிறார்கள். இதே வழக்கில் இரண்டு போலீஸ்காரர்களும் சம்பந்தப்​பட்டு இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற நினைத்த போலீஸ்காரர்கள் பொட்டுவையும் சேர்த்துக் காப்பாற்றி​விட்டார்களாம்!''
''அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸ் பண்ணு​வாரா?''
''மதுரையில் இப்போது எவருமே ஆக்டிவ் பாலிடிக்ஸ் பண்ணவில்லை. பொட்டு மட்டும் பண்ணுவாரா என்ன?'' என்று சிரித்த கழுகாரைப் பார்த்து நாமும் சிரித்தோம்!
''முதல்வர் ஜெயலலிதாவை மையப்​படுத்தி சர்ச்சை கிளப்பிய சிறுதாவூர் பங்களா விவகாரம் மீண்டும் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது. மாநிலம் முழுவதும், தி.மு.க. மற்றும் பலரால் கடந்த ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை விசாரிக்க மாவட்டக் குற்றப் பிரிவுடன் இணைந்த தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் வரை பலரும் சிறைக்கு செல்கிறார்கள். இதில் சந்தடியில்லாமல் ஒரு திடுக் வழக்குப் பதிவாகிவிட்டது...''
''என்ன சொல்ல வருகிறீர்?''
''சில தினங்களுக்கு முன்பு காஞ்சி மாவட்டத்தில் இயங்கி வரும் நில அபகரிப்​புப் புகார் தொடர்பான பிரிவுக்கு, சென்னை பாலவாகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்மணி சத்தம் இல்லாமல் வந்து போனார். ஓர் இடத்தையும் குறிப்பிட்ட சர்வே எண்ணையும் புகாரில் தெரிவித்து, இந்த இடம் தன்னிடம் இருந்து சில நபர்களால் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவித்தார். நில அபகரிப்​புப் புகார் என்றாலே ஆர்வம் காட்டும் போலீஸாரும், முறைப்படி புகாரைப் பதிவு​செய்துகொண்டார்கள். விசார​ணைக்காக எதிர்த் தரப்புக்கு தேதி குறிப்பிட்டு சம்மனையும் ஓர் அதிகாரி மூலம் கொடுத்து அனுப்பினார்களாம்.''
''வந்தாரா எதிர் பார்ட்டி?''
''வருவதாவது...! குறிப்பிட்ட அந்த விலாசத்துக்கு இரண்டு காவலர்கள் இயந்திரத்தனமாக சம்மனைக் கொண்டுசேர்த்த அடுத்த அரை மணி நேரத்தில், காஞ்சி மாவட்டக் காவல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட புகாருக்கு உரிய இடம் வேறு எதுவும் அல்ல; அந்த சிறுதாவூர் பங்களாவேதான்!''
''நீர் உண்மையைத்தான் சொல்கிறீரா?''
''விஷயத்தை முழுமையாகக் கேளும்! அந்த நிலம் யார் பெயரில் உண்டோ... அவருக்குத்தான் காவல் அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். அவர்கள் மூலமாகக் காவல் துறை உயர் வட்டாரத்தில் விசாரிப்பு நடக்கவும்...... சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து காச்மூச்சென்று கத்திவிட்டார்களாம் பெரிய அதிகாரிகள்!''
''ஹையோ... ஹையோ!''
''கேளும்... 'ஏன்யா, எந்தப் புகார் வந்தாலும் முன்னப்பின்ன விசாரிக்காம சம்மனைக் கொண்டு​போய் நீட்டுவீங்களா?’ என்று எழும்பிய கேள்விக்கு போலீஸ் அதிகாரிகளால் சரியான பதில் சொல்ல முடியவில்லையாம். 'சம்பந்தப்பட்ட அந்த பெண்மணியிடம் பேசி விசாரணை செய்து, விஷயம் வெளியே தெரியாதவாறு அடுத்தக் கட்ட விஷயத்தைக் கவனியுங்கள்’ என்று கூடுதல் உத்தரவு வந்ததாம். இதனால், இப்போது இந்த விவகாரத்தில் விஜயலட்சுமியைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போலீஸார், மேலிட உத்தரவுப்படி சத்தம் இல்லாமல் விசாரணை செய்கிறார்கள். இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 22-ம் தேதி, உரிய ஆவணங்களுடன் வருமாறு விஜயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்களில் போலித்தன்மை இருந்தால், அவர் மீதே கைது நடவடிக்கை எடுக்கலாம். மாறாக அந்த விஜயலட்சுமிக்கு மாற்றுக் கட்சியின் ஆதரவு கிடைத்தால், சிறுதாவூர் மறுபடி தலைப்புச் செய்தி ஆகலாம்.''
''சம்மன் அனுப்பிய அதிகாரிகளை சும்மா விட மாட்டார்களே..?''
''மூன்று பேருக்கு துறைரீதியாக மெமோ கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

No comments:

Post a Comment