Tuesday, November 29, 2011

கொக்கு தலையில் வெண்ணெய்!


சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, பல இலச்சினைப் பொருள் விற்பனைக் கடைகள் என்றால் 51 விழுக்காடும், தனிஇலச்சினைக் கடைகள் என்றால் 100 விழுக்காடும் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுடன், கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸýம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

ஆனால், மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் நாடாகிய சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இத்தகைய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதையும், இந்தோனேஷியாவில் இத்தகைய அனுமதிக்குப் பிறகும் அங்கே 90 விழுக்காடு சில்லறைக் கடைகள் தொடர்ந்து நீடித்து இருப்பதையும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி நியாயப்படுத்த நினைக்கிறது.

இதனிடையே, அன்னிய முதலீட்டுக்கு ஆதரவான அமைப்புகள் ஒன்று சேர்ந்து தங்கள் நியாயத்தைப் பத்திரிகைகள் மூலம் பதிவு செய்யத் தொடங்கிவிட்டன. இங்குள்ள ஷாப்பிங் மால் போன்ற உள்ளூர் முதலாளிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ அதையேதான் அன்னிய நேரடி முதலீட்டு நிறுவனங்களும் செய்யப்போகின்றன. ஏன் இந்த பயம்? ஏன் இந்த இரண்டுவகை நியாயங்கள்? என்று புன்னகையுடன் கேள்வி எழுப்புகின்றன.

இத்தகைய பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் வந்தால், ஆங்காங்கே குளிரூட்டு வசதிகளுடன் காய்கறிகளைப் பாதுகாத்து, விலையேற்றத்தை ஒரே சீராக வைக்க முடியும். இதனால் விவசாயிகளுக்குத்தான் அதிக பயன் என்று மத்திய அரசின் இந்தத் திட்டத்தை வரவேற்கும் தொழில்நிறுவன கூட்டமைப்புகள் கூறுகின்றன.

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், 60 லட்சம் பேருக்கு சரக்குகள் கையாளும் தொழில்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா சொல்லும் வாதங்கள் எந்த அளவுக்கு சரியான புள்ளிவிவரம் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

மத்திய அரசு சொல்வதைப்போல முக்கியமான 53 நகரங்களில் மட்டுமே இந்த பன்னாட்டு சங்கிலித்தொடர் நிறுவனங்கள் தங்கள் கடைகளைத் திறக்கப் போகின்றன என்றால், அதிகபட்சம் ஒரு நகரில் 50 கடைகள் என்றாலும் 2,650 கடைகள்தான் திறக்கப்படலாம். இதனால் ஒரு கோடிப் பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.

புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிவிட முடியும் என்பது கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் கதையாகத்தான் இருக்கும்.

51 விழுக்காடு முதலீடு செய்யும்பட்சத்தில் 50 விழுக்காடு முதலீட்டை, தொழில் வர்த்தகப் பின்புலக் கட்டமைப்புக்காக ஊரகப் பகுதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. அதாவது, இவர்கள் தங்கள் அங்காடிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்வது, உற்பத்தி செய்வது, பதனிடுதல் அல்லது பாக்கெட்டில் அடைத்தல் ஆகிய பணிவாய்ப்புகளைக் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும். நேரடியாக வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து விற்பனை செய்யக்கூடாது என்பது இந்த நிபந்தனைக்குப் பொருள். ஆனால், இதனை கண்காணிக்கப் போவது யார்? இதைக் கண்காணிக்க இயலுமா? அதை மாநில அரசு செய்யுமா அல்லது மத்திய அரசு செய்யுமா?

பன்னாட்டு நிறுவனங்களின் செய்கைகளை நமது அதிகார வர்க்கம் கண்காணித்து நெறிப்படுத்தும் என்பதை நாம் நம்ப வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கெனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு 100 விழுக்காடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே தனியாக ஒரு கம்பெனி தொடங்கி, நிலங்களைச் சொந்தமாக வாங்கியோ, குத்தகை எடுத்தோ விவசாயம் செய்யலாம். காய்கறி விளைவிக்கலாம். அதாவது காலப்போக்கில், சிறு விவசாயிகள் கபளீகரம் செய்யப்பட்டு அவர்கள் விவசாயக் கூலிகளாகவும், நகரங்களில் ரிக்ஷா தொழிலாளர்களாகவும் கைவண்டி இழுப்பவர்களாகவும் கூலியாள்களாகவும் காவலாளிகளாகவும் ஏவலாளிகளாகவும் பிழைப்பை நடத்துவார்கள் என்று பொருள்.

மருந்து தயாரிப்புத் துறையில் 100 விழுக்காடு முதலீட்டுக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் 100 விழுக்காடு முதலீட்டில் புதிய கம்பெனிகள் தொடங்காமல், இங்குள்ள புகழ்பெற்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கும் வேலையில் இறங்கிவிட்டார்கள். இதைத் தடுக்க முடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. காப்பீட்டுத் துறையில் 49 விழுக்காடு அன்னிய நேரடி முதலீடும், ஓய்வூதியத் துறையில் அன்னிய நேரடி முதலீடும் அனுமதிக்கப்பட்டுவிட்டது. விமானப் போக்குவரத்துத் துறையில் அன்னிய முதலீடு 26 விழுக்காடு சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுவிட்டது.

எத்தனை எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இப்போது அவசர அவசரமாக அமைச்சரவைகூடி சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலில், அரசை எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, நிர்வாக மெத்தனம், ஊழல் குற்றச்சாட்டுகள், ரூபாயின் மதிப்பு குறைவால் ஏற்பட்டிருக்கும் நிதிநிர்வாகச் சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முனைப்பையும் திசைதிருப்புவது ஒரு நோக்கம். இரண்டாவதாக, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அன்னிய முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வந்த பிறகு, அந்தப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்து எதுவும் கிடைக்கவில்லை என்று கையை விரிப்பது இன்னொரு நோக்கம்.

மத்திய அரசின் நோக்கம் புரிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்தான் நிஜமா, பொய்யா என்று யோசிக்க வைக்கிறது. இவர்களது அக்கறை நிஜமாக இருக்குமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்து அரசைப் பணிய வைக்க வேண்டும். அப்போதுதான் இவர்களது எதிர்ப்பு நிஜமா, நடிப்பா என்பதை நாம் உறுதிசெய்ய முடியும்.

No comments:

Post a Comment