Friday, November 18, 2011

அதிமுகவில் மீண்டும் அனிதா ராதாகிருஷ்ணன்?

ரசியலில் அதிரடியும் ஆபத்து, அமைதியும் ஆபத்து!’ என்பது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரொம்பவே பொருந்துகிறது. அதிரடி கைதுக்குப் பிறகு அரசியலில் அமைதிகாத்து வரும் அனிதா, மீண்டும் அ.தி.மு.க.வில் இணையப்போகிறார் என்ற செய்தி தென் மாவட்டங்களைப் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.



அ.தி.மு.க.வில் சேர்ந்து குறுகிய காலத்தில் எம்.எல்.ஏ., அமைச்சர், மாவட்டச் செயலாளர் என்று கோபுரத்தின் உயரத்தை எட்டியவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2002 முதல் 2009 வரை தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் அவர் ராஜ்யம்தான் நடந்தது. அவரது ஆதரவாளர்கள் தான் கட்சிப் பதவிகளை அலங்கரித்தார்கள். அதற்கும் மேலாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். அதனாலேயே அவருக்கு 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தார் ஜெயலலிதா.

இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அவர், ஆளுங்கட்சியான தி.மு.க.வை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் பிரமாண்டமான போராட்டங்களை நட த்தினார். இப்படி அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அவர், திடீரென்று தி.மு.க.வில் சேரும் முடிவை எடுத்தார். தி.மு.க. தலைமையும் அவரை வாரி அணைத்துக் கொண்டது. மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரின் ஆதரவாளராக தன்னைக் காட்டிக்கொள்ள படாதபாடு பட்டார். அவர் ராஜினாமா செய்ததால் திருச்செந்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட அவருக்கே வாய்ப்பு அளித்தது தி.மு.க. 2011 பொதுத் தேர்தலிலும் அவர்தான் வேட்பாளர்.

அ.தி.மு.க. - தி.மு.க. என்று இரண்டு கட்சியிலும் மின்னிய அவர், சமீபகாலமாக மங்கிப்போய் இருக்கிறார். 2011 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் வென்ற இரண்டு தி.மு.க. வேட்பாளர்களில் அனிதாவும் ஒருவராக இருந்தார். இந்நிலையில், தோல்வியால் துவண்டுபோன தி.மு.க.வில் பிரச்னை வெடிக்கத் தொடங்கியது. குறிப்பாக, கருணாநிதியின் குடும்பத்தில் ஸ்டாலி னுக்கும் அழகிரிக்கும் இடையே பெரும் விரிசல். அப்போது மாநிலம் முழுக்க யார் யார் ஸ்டாலின் ஆதரவாளர்கள், யார் யார் அழகிரியின் ஆதரவாளர்கள் என்ற கணக்கெடுக்கும் வேலை ரகசியமாக நடந்தது. அதில் அழகிரியின் ஆதரவாளர் அனிதா என்று முடிவானது.

அதற்குப் பிறகு அறிவாலயத்தில் அவருக்கு மரியாதை குறைய ஆரம்பித்தது. யாரிடம் நெருக்கம் காட்டுவது என்பதில் அவருக்குக் குழப்பம் ஏற்பட்டது தான் அதற்குக் காரணம். அதனால் அப்செட்டான அவர், தீவிர அரசியலை ஓரங்கட்டிவிட்டு அமைதி காக்க நினைத்தார். இந்த நிலையில்தான், அவர் ஒரு கொலைவழக்கில் கைது செய்யப்பட்டார். மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்திருக்கும் அவர் தற்போது அமைதியே உருவாக மாறிவிட்டார்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் அவரது பங்களிப்பு எதுவும் இல்லை. அவரை நம்பி அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க. வந்த யாருக்கும் அவரால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கிக் கொடுக்க முடியவில்லை. தென் மாவட்டங்களில் திருச்செந்தூர், கன்னியாகுமரி தொகுதியை வெல்லும் கட்சிகளே ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற சென்டிமெண்ட் உண்டு. கடந்த முறை அ.தி.மு.க.வில் அனிதா வெற்றி பெற்றார். பின்னர் தி.மு.க.வில் இணைந்து மீண்டும் வெற்றி பெற்றார். வரலாறு இப்போது திரும்பப் போகிறது என்றும் சொல்கிறார்கள்.

அதுபற்றி அரசியல் பிரமுகர்கள் சிலரிடம் கேட்டோம். “அனிதாவைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நல்ல செல்வாக்கோடுதான் இருந்தார். சென்னையில் அவரது குடும்பத் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய ஜெயலலிதா, ‘அடுத்து அ.தி.மு.க. ஆட்சி வந்தால் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருப்பார்’ என்று பேசினார். வழக்கமாக அவர் யாரையும் அப்படிப் பாராட்டிப் பேசமாட்டார். அனிதா மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டார் அனிதா. அ.தி.மு.க. சோதனையான காலகட்டத்தில் இருந்த போது தி.மு.க.விற்குப் பறந்துவிட்டார் அனிதா.

அதைவிட அ.தி.மு.க.வைப் பலமிழக்கச் செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். அது அ.தி.மு.க. தலைமைக்கு தாங்கிக்கொள்ள முடியாத கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதேநேரத்தில் அவரால் அ.தி.மு.க. போல தி.மு.க.வில் வேகமான அரசியல் செய்ய முடியவில்லை. அதனால் அவர் தன்னுடன் வந்தவர்களைக்கூட தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வைப் பொறுத் தவரை அனிதாவுக்கு சரியான மாற்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால், அனிதா போன்ற ஒருவர் அந்தக் கட்சிக்குத் தேவை என்ற பேச்சு அந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில்தான், அனிதா மீண்டும் அ.தி.மு.க.வில் இணையப் போகிறார் என்ற பேச்சு றெக்கை கட்டிப் பறக்கிறது. அவர் ஜெயிலில் இருக்கும்போதே அதற்கான காரியம் நடந்துவிட்டதாம். அதனால்தான் அவர் உள்ளாட்சித் தேர்தலில் வேலையே பார்க்கவில் லை என்றும் சொல்லப்படுகிறது. ‘‘தி.மு.க.வில் இருந்து வெளியேறினால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதிருக்கும், மீண்டும் எம்.எல்.ஏ. சீட் தரப்படாது என்றும் சொல்லப்பட்டுள்ளதாம். முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பார்க்க அனிதாவுக்கு தேதி கிடைத்துவிட்டது. அதுவரை அவர் யாரிடமும் பேசமாட்டார்’ என்றும் சொல் கிறார்கள்.

இதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார்? அவரிடமே கேட்டோம். “நான் தற்போது மதுரையில் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறேன். அதனால், என்னால் உள்ளாட்சித் தேர்தலில் வேலை பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான். அதற்காக கட்சிக்காரர்களிடம் கூட பேசவில்லை என்பதெல்லாம் கட்டுக்கதை. நிபந்தனை ஜாமீன் முடிந்ததும் திருச்செந்தூர் வருவேன். தீவிர அரசியலில் ஈடுபடுவேன். ‘அ.தி.மு.க.விற்குப் போய்விடுவேன் என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்வது போலத்தான். மொத்தத்தில் அரசியலில் என்னைப் பிடிக்காத யாரோ இப்படி வதந்தியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார் அவர்.

No comments:

Post a Comment