Thursday, November 24, 2011

ஓட்டுப்போட்டவனை ஓரங்கட்டிவிட்டு அம்பானிக்கும் விஜய் மல்லய்யாவுக்கும் கவலைப்படுவதா?

“வால் தெருவைக் கைப்பற்றுவோம்'' என்னும் போர் முழக்கம் அண்மைக் கால உலகில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

vijay_mallya_neetu1

வால் தெரு அமெரிக்க முதலாளித்துவத்தின் புகலிடம்! "பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?'' என்னும் வெளிப்படையான கேள்வி அமெரிக்காவை மூச்சுத் திணறச் செய்துவிட்டது.

உலகின் பாதி சிவப்பாகிவிட்ட காலகட்டத்தில் கூட, இப்படி ஒரு போராட்டம் அமெரிக்காவில் வேர் பிடிக்க முடியவில்லை.

உலகெங்குமுள்ள நாடுகள் சுரண்டப்படுவதால், குவிந்து வழிகின்ற செல்வத்தில் அடிமட்ட மக்களுக்குப் பங்கில்லை என்றாலும், வழிவதைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பாவது அவர்களுக்கு இருந்தது. அதோடு அவர்கள் அமைதியடைந்தனர்.

இன்று "உயிரைக் கையில் பிடித்துக் கொண்டாவது வாழலாம்” என்னும் நிலைக்கும் மோசம் வந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறம். கிடைக்கும் வேலைக்கும் போதிய ஊதியம் இல்லை என்பது இன்னொருபுறம்.

ஒபாமாவுக்கு முந்திய காலத்திலேயே இந்தச் சிக்கல் தோன்றிவிட்டது. ஆயினும், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் சிறந்த தீர்வைத் தன்னால் வழங்க முடியும் என்று ஒபாமா தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்!

"இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்த அந்த மக்கள் நாம்தாம்!'' ஒபாமாவின் இந்த முழக்கம் அமெரிக்கர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டியது. ambani_6501a

அந்தத் தருணம் வந்துவிட்டதாக மக்கள் நம்பினார்கள். மூடி இறுகிப் போயிருந்த கதவுகளை ஒபாமா திறந்துவிடப் போகிறார்; வாழ்க்கைச் சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரப்போகின்றன என்று எதிர்பார்த்திருந்தார்கள்.

பொருளாதார முறை மாறாமல் பீடத்தில் அமர்கின்ற மனிதர்கள் மாறுவதால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்?

ஒபாமா இன்று புறந்தள்ளப்பட்ட மனிதராகிவிட்டார்!

1989-ல் சோவியத் நாடு சீர்குலைந்து சிதறிச் சின்னாபின்னப்பட்ட பிறகு, தம்பட்டம் அடித்துக்கொண்டு உயர்ந்தெழுந்த தாராளமயமாக்கல் கொள்கை உலகை ஒரு கிராமமாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளை வெடித்துப் போகுமளவுக்குப் பெருக்கச் செய்தது. அந்தக் கொள்கை உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தது. மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும், ப. சிதம்பரமும் இந்தியாவில் அந்தக் கொள்கை ஈன்றெடுத்த மக்கள்தாம்!

நாளொன்றுக்கு 32 ரூபாய் வருவாய் உள்ளவனும், ஒரு கணவனும், மனைவியும் இரு மக்களும் வசிப்பதற்கு 77 மாடிகள் கொண்ட வீட்டை 7 ஆயிரம் கோடி ரூபாய்க்குக் கட்டிக் கொண்டுள்ள அம்பானியும் வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் என்று ஒரே தட்டில் வைத்துச் சமப்படுத்த நினைக்கும் மன்மோகன் அரசின் கொள்கைகள் தாராளமயமாக்கல் கொள்கையிலிருந்து இரவலாகப் பெறப்பட்டவைதாம்.

pala_karupaiya1ஒரு தனி மனிதன் தன்னுடைய சிறு தொழில் முறிந்து திவாலாகிப் போகின்றபோது கண்டுகொள்ளாத ஓர் அரசு, விஜய் மல்லைய்யாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் கடனில் மூழ்குகின்றபோது கவலை கொள்கிறது. அரசு கை கொடுக்க வேண்டும் என்பதை ஒரு கடமையாக்குகிறது அந்த நிறுவனம்; அப்படிச் செய்வது இன்றியமையாதது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவியும் பரிந்துரைக்க முந்துகிறார்.

இதேபோல் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வங்கிகள் முறிவுற்றபோதும், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் நலிவுற்றபோதும், அவற்றுக்கு முட்டுக்கொடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் முனைந்து நின்ற நிலையில் மக்களிடம் ஏற்பட்ட கொதிப்புத்தான் இந்த "வால் தெருவைக் கைப்பற்றுவோம்' என்ற போராட்டம்.

மக்களின் வரிப்பணம் பெருமுதலாளிகளை முட்டுக் கொடுக்க ஏன் செலவு செய்யப்பட வேண்டும்? அவர்களின் நிறுவனங்களைக் காக்க அரசு ஏன் முன்னுரிமை அளிக்க வேண்டும்?

வளம் கொழிக்கச் செய்யும் பொருளாதாரக் கொள்கை என்றீர்களே! தொண்ணூறு பேரை உறிஞ்சிப் பத்துப் பேர் வாழ்வது என்ன கொள்கை?

வசதியுள்ள சிலருக்கும் வசதியற்ற பலருக்கும் உலகம் இதுவரை அறிந்திராத வகையில் இடைவெளி அகன்று போயிருப்பதுதானே இந்தக் கொள்கையால் ஏற்பட்ட பயன்?

பெருமுதலாளிகளோடு கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவதன் விளைவுதானே இந்த அராஜகப் போக்கு!

கூழுக்குப் போட உப்பில்லை என்பானுக்கும், பாலுக்குப் போடச் சீனி இல்லை என்பானுக்கும் கவலை ஒன்றுதான்! ஆனால், தேவை ஒன்றுதானா? எவனுடைய தேவை முன்னுரிமை உடையது?

"கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்னும் நூலில் சான்ரசுகின் சொல்வார்: ""ஒருவனிடம் பத்து ரூபாய் இருப்பதால் அவ மகிழ்ச்சியடைவதில்லை; பக்கத்திலிருக்கும் இன்னொருவனிடம் அந்தப் பத்து ரூபாய் இல்லாதபோதுதான் அவன் மகிழ்ச்சி அடைகிறான். அப்போதுதான் அடுத்தவனுக்கு ஒரு விலை குறிக்க முடியும்?''

தாராளமயமாக்கல் கொள்கை மேட்டுக்குடியினர்க்கும், அடிமட்ட நிலையினர்க்கும் இருக்கும் இடைவெளியை மென்மேலும் பெருக்குவதில்தான் உயிர்த்திருக்கிறது.

2008-ல் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கும் பொருளாதாரச் சீர்குலைவின் விளைவுதான் பெருமுதலாளிகளுக்கு எதிராக ஆங்காங்கே wall-street-protest3a
வெடித்துக் கிளம்பும் இந்தப் போராட்டம்!

கிரீசு நொறுங்கிவிட்டது; இத்தாலி தவியாய்த் தவிக்கிறது. அயர்லாந்து நன்றாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் எந்த நாட்டு மக்கள்தான் நிறைவாக வாழ்கிறார்கள்?

அமெரிக்காவின் நியூயார்க், இங்கிலாந்தின் லண்டன், இத்தாலியின் ரோம், ஜெர்மனியின் பிராங்பர்ட், ஸ்பெயினின் மாட்ரிட், போர்ச்சுகலின் லிஸ்பன், செர்பியா, மெக்ஸிகோ, பெரு, சிலி என 82 நாடுகளில் 951 நகரங்களில் "வால் தெருவைக் கைப்பற்றுங்கள்' என்னும் போர்த் தீ கொழுந்து விட்டு எரிகிறது.

இந்தப் போராட்டத்தின் சிறப்பு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் இதன் களங்களாக உள்ளன என்பதுதான். இன்னொரு சிறப்பு, குறிப்பான எந்தத் தலைவனாலும் இது வழிநடத்தப்படவில்லை என்பது. தானாக வெடித்துக் கிளம்பிய ஒன்று இது!

பிறிதொரு பெருஞ்சிறப்பு, இந்தப் போராட்டம் எந்தக் குறிப்பிட்ட தனியொரு ஆட்சியாளனுக்கும் எதிரானதில்லை.

walls_st_protest-11-a2கோபம் ஒபாமா மீதன்று, கடைப்பிடிக்கப்படும் பொருளாதார முறையின் மீதானது.

ஒபாமாவானாலும், புஷ் ஆனாலும், மன்மோகன் ஆனாலும், அத்வானி ஆனாலும், எவரானாலும் போர்டு நிறுவனத்துக்கும், அம்பானிகளுக்கும் சேவை செய்ய வந்தவர்களே! 2008-ல் பல மேலைநாடுகளைத் தாக்கிய பொருளாதார மந்தம் என்னும் நிலை இந்தியாவைத் தாக்கவில்லை என்று மன்மோகன் ஒரு முறை மகிழ்ந்தார்.

ஆனால், அதற்கு முன்னரே இந்தியாவின் நிலை கவலைக்கிடம். அங்கே 82 நாடுகளில் போராட்டம் என்றால் இந்தியாவில் ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், ஆந்திரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற ஒன்பது மாநிலங்களில் 60 மாவட்டங்களில் நம்முடைய ஆட்சியும் இல்லை; அரசியல் சாசனமும் இல்லை. அவை மாவோயிஸ்ட்வாதிகளின் பிடியில் இருக்கின்றன.

ஆந்திரம் தொடங்கி நேபாளம் வரை அந்த இயக்கம் வேர் பி டித்து நிலைபெற்றிருக்கிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சராகத் திகழும் ப. சிதம்பரம், ""மாவோயிசம் என்பது பயங்கரவாதத்தை விடக் கொடுமையானது'' என்று சொல்கிறார்.


அவரால் பயங்கரவாதத்தையும் ஒழிக்க முடியவில்லை; மாவோயிசத்தையும் ஒழிக்க முடியவில்லை. அலைக்கற்றை ஊழலில் இவர் பெயரும் சேர்ந்து அடிபடத் தொடங்கிய உடனே, இவர் சனியின் பீடிப்புத்தான் இதற்குக் காரணம் என்று ஒரு நவக்கிரகக் கோயிலுக்குத் தன் மனைவி, மகன், மருமகளுடன் சென்று காக்கை மண்பொம்மையைத் தலையில் சுமந்துகொண்டு குடும்பத்துடன் மூன்று முறை பிராகாரம் வந்திருக்கிறார்.


மாவோயிசத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்குக்கூட ஏதாவது ஒரு தீர்த்த யாத்திரைக்குச் சிதம்பரம் திட்டமிட்டு வைத்திருக்கக் கூடும்!


60 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்வாதிகள் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? இந்தியா முழுவதும் வனச் செல்வம், மலைச் செல்வம், சுரங்கச் செல்வம் ஆகியவை கடந்த சில காலங்களாகக் கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. ஆட்சியாளர்களும் தொழில் நிறுவனங்களும் கூட்டாளிகள்!


மதுரைக்குப் பக்கத்தில் கீழவளவில் இருந்த ஒரு மலையே காணாமல்போய், மலை இருந்த இடம் சமதளம் ஆகிவிட்டது. அழகிரி ஆசீர்வாதம் மலைக்குக் கிட்டாமல், சில மனிதர்களுக்குக் கிட்டியமையால் மலை தன் ஆவியைத் துறந்துவிட்டது என்கிறார்கள் சுற்றுப்புறத்தில் வாழும் பொதுமக்கள்.


கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கைங்கர்யத்தால் ஒரு சுரங்கமே சீனாவுக்கு ஏற்றுமதியானது; எல்லாம் நம் அரசின் துணையோடுதான். அதில்
அடித்த கொள்ளையைக் கொண்டு ரெட்டி சகோதரர்களால் எடியூரப்பாவின் அரசை உருவாக்கவும் முடிந்தது; அவரைக் கண்ணீர் விட வைத்துக் கீழிறக்கவும் முடிந்தது.


மாவோயிச முறைகள் நியாயமானவை என்பதல்ல; சுரண்டல்காரர்களோடு கூட்டணி சேரும் ஆட்சியாளர்கள்தாமே மாவோயியவாதிகளின்wall_street_protest1பிறப்புக்குக் காரணம். பெருமுதலாளிகளின் கருவறையில் அவர்களுக்கு எதிரானவர்கள் வளர்கிறார்கள் என்பதுதானே மார்க்சீய அறிவு வாதம்.


மாவோயிஸ்ட்வாதிகளோடு மன்மோகன் சிங்குக்குள்ள கோபமே கனி வளங்களைச் சந்தைப்படுத்த முடியவில்லை என்பதுதானே.

தாராளமயமாக்கல் என்பதன் தாரக மந்திரம் சந்தை. தன்னுடைய பேரழகு மனைவியின் மேகம் போன்ற பெருங்கூந்தல் கூட ஒரு தொழில்முனைவோனுக்குச் சந்தைப் பொருள்தான்!


"வால் தெருவைக் கைப்பற்றுவது' என்பதன் பொருள் சுரண்டலை ஒழிப்பது என்பதுதான்.


”பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?


-பழ.கருப்பையா

நன்றி: தினமணி

No comments:

Post a Comment