Wednesday, November 30, 2011

பீ.எம்.டபிள்யூ இந்தியா ,பயன்படுத்திய காரை விற்பனை செய்ய புதிய ஏற்பாடு

சொகுசு கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள பீ.எம்.டபிள்யூ நிறுவனம்,பீ.எம்.டபிள்யூ பிரிமியம் செலக்ஷன் என்ற பெயரில் பயன்படுத்திய கார்களை, மறுவிற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பீ.எம்.டபிள்யூ (இந்தியா) நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஆண்ட்ரியாஸ் ஷாப் கூறியதாவது:உலகளவில், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது. இந்தியாவில், சொகுசு கார்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.




நடப்பு 2011ம் ஆண்டில், அக்டோபர் வரையிலுமாக, 8,042 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 70 சதவீதம் அதிகமாகும்.இந்தியாவில், சொகுசு கார் பிரிவில், நிறுவனம், 40 சதவீத பங்களிப்பை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைக்கும் வகையில், நிறுவனம் பல்வேறு முனைப்பு திட்டங்களை அமல்படுத்திவருகிறது.அதன்படி, நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை, வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப பெற்று, புதுப்பித்து அதை மறு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, 5 ஆண்டுகள் அல்லது 1.20 லட்சம் கி.மீ. வரை பயன்படுத்திய கார்களே, நிறுவனத்தின் "பிரிமியம் செலக்ஷன்' என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்படும்.இவ்வகையான கார்களுக்கு, 2 வருடங்கள் அல்லது 2 லட்சம் கி.மீ. வரை வாரண்டி வழங்கப்படும். இதற்கு, 13 சதவீத வட்டியில், நிறுவனத்தின் சார்பில் கடனுதவியும் வழங்கப்படும்.உதாரணமாக, நிறுவனத்தின் "320டி' என்ற மாடலின் புதிய கார் விலை, 28 லட்சம் ரூபாய். இது, 3 ஆண்டுகளுக்கு பிறகு, 16 முதல் 20 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக, நடுத்தர மக்களும் சொகுசு கார்களை வாங்க முடியும்.நிறுவனத்தின் சொகுசு கார்கள், சென்னை, மும்பை, பூனே, லூதியானா, குர்கான், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட, 7 விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும்.நிறுவனத்தின் இணையதளத்தில், பயன்படுத்திய காரின் விற்பனை குறித்த, அனைத்து தகவல்களும் தெளிவாக இடம்பெற்றுள்ளன.பயன்படுத்தப்பட்ட கார் என்பதற்கான அடையாளம் தெரியாத வகையில், சிறந்த தொழில்நுட்ப சோதனைக்கு பிறகு, இக்கார்கள் விற்பனை செய்யப்படும்.இவ்வாறு ஆண்ட்ரியாஸ் ஷாப் கூறினார்.

No comments:

Post a Comment