Thursday, November 24, 2011

அக்கறையால் எழுந்தது அல்ல...


வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றுவருகின்ற சுமார் 10 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வரவு செலவு விவரம் குறித்து நுட்பமாக விசாரணை நடத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு நிதியைப் பெற்று, அந்தப் பணத்தைக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் வளர்ச்சிக்கு எதிராகவும் இத்தகைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்குகள் நடத்துவதோடு, புத்தகங்கள் பிரசுரங்கள் வெளியீடு ஆகியவற்றிலும் ஈடுபடுவதாக உள்துறை அமைச்சகத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து இத்தகைய உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தத் தன்னார்வ அமைப்புகளின் பெயரை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடவில்லை என்றாலும், இந்தப் பட்டியலில் யோகா குரு ராம்தேவ் நடத்திவரும் தன்னார்வ அமைப்பின் பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு பாரதிய ஜனதா கட்சியை மட்டுமே குறி வைத்திருக்கிறது என்றும் சொல்லிவிட முடியாது. இந்த உத்தரவின் இன்னொரு நோக்கம், ரூ.14,000 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்கவிடாமல், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தும் அமைப்புகளுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்று வெளிப்படையாகவே மத்திய அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பினார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அண்ணா ஹசாரே, கேஜ்ரிவால், கிரண்பேடி, யோகா குரு ராம்தேவ் எனப் பலரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் நடத்திய போராட்டத்துக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுசெய்ய வெளிநாட்டிலிருந்துதான் நிதி வந்தாகவேண்டும் என்பதில்லை. இவர்கள் அந்த அளவுக்குப் பெரிய செலவுகளைச் செய்துவிடவும் இல்லை. இந்தப் போராட்டத்துக்காக இந்தியர்கள் கொடுத்த பணத்தையே இவர்கள் செலவழித்து முடித்திருக்கவில்லை என்பதுதான் நிஜம்.
இந்தியாவில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி வருகிறது என்றும், இவை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றும் பல ஆண்டுகளாகவே பல்வேறு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்தும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசுக்கு இப்போதுதான் காலம் கடந்த ஞானம் ஏற்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புகளும், அறக்கட்டளைகளும் தங்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிதி பற்றிய விவரங்களை வருமான வரிக் கணக்குப் படிவத்தில் தனியாக இணைக்கப்படும் படிவத்தில் குறிக்க வேண்டும் என்ற உத்தரவை சென்றவாரம்தான் பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவும் அடுத்த ஆண்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போதுதான் அமலுக்கு வரப்போகிறது.

இதுநாள் வரைக்கும் இத்தகைய தன்னார்வ அமைப்புகளிடம் வெளிநாட்டு நிதி பற்றிய விவரங்களைக் கட்டாயமாகத் தெரிவிக்கவேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தவில்லை என்பதே மகா கேவலம். இதற்குக் காரணம் இந்தியாவில் பதிவு பெற்றுள்ள 4 லட்சம் தன்னார்வ அமைப்புகளில் பெரும்பான்மையானவை சிறுபான்மையினத்தவர் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் என்பதால், இத்தனை நாளாகக் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது இந்திய அரசு. இப்போதுதான் காலம் கடந்து, புதிய ஞானம் பிறந்திருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து நன்கொடையாகப் பெறப்படும் நிதியைத் தனியான படிவத்தில் விவரமாகக் குறிப்பிட வேண்டும் என்கின்ற இந்த புதிய நடைமுறைக்குக் காரணம், வருமான வரித்துறை சில தன்னார்வ அமைப்புகளின் கணக்குகளைப் பார்த்தபோது, அவர்கள் வெளிநாட்டிலிருந்து கணிசமான தொகையைப் பெற்றிருப்பதும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தபோது, அதுகுறித்து படிவத்தில் குறிப்பிடாமல் மறைத்திருப்பதும் தெரியவந்திருப்பதுதான். அப்படியானால் அவர்கள் யார்? அவர்கள் மீது வருமானவரித் துறை எடுத்த நடவடிக்கை என்ன? இதை ஏன் மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்குகிறது? இதையெல்லாம்கூடவா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுதிக்கேட்டுப் பெறுவது?

தன்னார்வ அமைப்புகளில் மிகச்சிலவே நேர்மையாகவும் மற்றவர்கள் பாராட்டும் வகையிலும் தொண்டு செய்து வருகின்றன. சில அமைப்புகள் வெறும் சொத்துப் பாதுகாப்புக்காக உருவானவை. அடுத்த ரகம் ஒன்று உண்டு. நாட்டில் சுனாமி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு, எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு கைகழுவும் பழக்கத்தைச் சொல்லித்தருவது, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தல், தெருவோரச் சிறார்கள் மறுவாழ்வு என்று எந்த அரசுத் திட்டமானாலும் இவர்கள் வந்துவிடுவார்கள். அதிகாரிகளுடன் "திட்டம் போட்டு', ஒப்புக்கு சில கருத்தரங்குகள், பேரணிகள் நடத்தி, பத்திரிகைகளில் செய்திகளை வரவழைத்து, பெரும் லாபம் பார்க்கும் அமைப்புகள் இவை.

அநேகமாக ஒருதடவைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள், பிரதமர்கள் உள்பட முன்னாள் மத்திய அமைச்சர்கள் போன்றோரின் நெருங்கிய உறவினர்கள் பெயரில் தன்னார்வ நிறுவனங்கள் செயல்படுவதும், லெட்டர்பேடில் மட்டுமே இயங்கும் இதுபோன்ற தன்னார்வ நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அமைச்சகங்களிலிருந்து ஆண்டுதோறும் நிதி உதவி கிடைப்பதும் முன்பே சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. பிறகு அந்தச் சர்ச்சை மறக்கடிக்கப்பட்டுவிட்டதை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறோம்.

சில அமைப்புகள் மத்திய அரசுக்கு எதிராக, இந்திய வர்த்தகத்துக்கு எதிராகச் செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டவை. சீனாவுக்குப் போட்டியாக திருப்பூர் பின்னலாடை விலை குறைந்தால், திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் என்கின்ற பிரச்னை பூதாகரமாகப் பேசப்படும். எதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து யுரேனியம் வாங்க வேண்டும்? நம் நாட்டிலேயே இக் கனிமத்தை வெட்டியெடுப்போம் என்றால், அங்கே பழங்குடி மக்களின் வாழ்வு என்னாவது? என்று ஒரு அமைப்பு கேள்வி எழுப்பும். குழந்தைத் தொழிலாளர் பிரச்னையும் பழங்குடியினர் பாதிக்கப்படுவதும் மிகவும் உண்மை. அதைவிடவும் மிகப்பெரிய உண்மை இவர்களின் குரல் கருணையினால் எழுந்தது அல்ல என்பது.
தன்னார்வ அமைப்புகள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளுக்கும்கூட, எங்கிருந்து பணம் வந்தாலும், அதனை உள்நாடு வெளிநாடு என்று பேதமில்லாமல் வெளிப்படையாக அறிவிப்பதும், கணக்குக்கு உள்படுத்துவதும் காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment