Friday, November 11, 2011

கல்லணை, தஞ்சை பெரிய கோயில் பாதுகாப்பாகத்தானே இருக்கின்றன!

'பள்ளிக்குப் போன பிள்ளை
களைத்து வருமே
எனும்
தினக் கவலையை மீறி
காற்றோடு கரைந்துபோகுமோ
எங்கள் சந்ததி என்ற
மனக் கவலை
தூக்கத்தைத் தின்னுது!’

- அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்.
வாசிக்கும்போதே வாய்விட்டு அழத் தோன்றும். சிலருக்கு அந்த அழுகையைப் பார்த்து சிரிக்கத் தோன்றும். ஆனால், இப்படியான வார்த்தைகளின் மூலம்தான் தங்களின் வேதனையையும் இயலாமையை யும் உலக மக்களுக்கு எல்லாம் எடுத்துச் சொல்லிவருகிறார்கள் கூடங்குளம் கிராம மக்கள். இந்த மக்களுடன் கைகோத்து நிற்கிறார்கள் விவசாயிகளும் வணிகர் களும்.


'எல்லாம் கிறிஸ்துவப் பாதிரியார்கள் தூண்டிவிட்ட கூட்டம்’ என்கிற குற்றச் சாட்டு இந்தப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வரு கிறது. பொதுவாக, ஒவ்வொரு பகுதியிலும் எந்த இனத்தவர், எந்த மதத்தவர் பெரும் பான்மையினராக இருக்கிறார்களோ... அவர்களில் ஒருவர் போராட்டத்தை முன்நின்று வழிநடத்துவது இயல்புதானே என்கிறார்கள் இந்தப் பிரச்னையைத் தொடக்கம் முதல் கவனித்து வருபவர் கள்.

இந்த மக்கள் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, 'வெளிநாட்டு ஏஜென்ஸிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அணு மின் நிலையத்தை எதிர்க்கிறார்கள்’ என்பது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகிறார்கள். இதில் குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் அடக்கம். இத்தனைக்குப் பிறகும் மக்கள் எந்தவிதத்திலும் துவண்டுபோகவில்லை என்பதுதான் ஆச்சர்யப்படவைக்கும் விஷயம். சில பள்ளிக் குழந்தைகள் 'அணு உலைகளுக்கு எதிராகப் போராடும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி’ என்று கடிதங்கள் எழுதி, அவற்றை மரப் பெட்டிகளில் வைத்துக் கடலில் விட்டிருக்கிறார்கள். தேவாலயப் பிரார்த்தனை வேளைகளிலும் 'எங்கே அணு உலை செயல்பட ஆரம்பித்துவிடுமோ?’ என்கிற அச்சம்தான் மன்றாடுதல்களாக இருக்கின்றது.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைமைகளில் ஒருவரான சுப.உதயகுமாரனிடம் பேசினோம். ''இதை இப்படியேவிட்டால், போராட்டம் வலு இழந்துவிடும் என்று மத்திய, மாநில அரசோ நினைத்தால்... அது அவர்களுக்குத்தான் தோல்வி. கூடங்குளம் அணு உலை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அணு சக்தித் துறை மக்கள்முன் வைக்க வேண்டும். நாங்கள் எங்கள் கருத்துக்கள், கண்டுபிடிப்புக்களை எடுத்துவைக்கிறோம். மக்கள் இரண்டையும் படித்து உண்மை எது என்பதை அறிந்துகொள்ளட்டும்!'' என்றார்.

சுப.உதயகுமாரனுடன் களத்தில் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், 'பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் புஷ்பராயன் என அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கிறார்கள். போராட்டத்தை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் நோக்கமும்.

கலாம் சொல்வதை ஏற்கலாமா?


கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஒரு பக்கம் வலுப் பெற்று வருகிற சூழ்நிலையில், கடந்த 6-ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கூடங்குளம் அணு மின் நிலையத் துக்கு வருகைபுரிந்தார். அங்கே அணு உலைகளை எல்லாம் சுற்றிப் பார்த்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கலாமுடன், இந்திய அணு சக்திக் கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின், கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி ஆகியோரும் உடனிருந்தனர்.

''நான் இந்த அணு மின் நிலையத்துக்கு வருவது இரண்டாவது முறை. இரண்டு காரியங்களுக்காக இங்கே வந்திருக்கிறேன். இந்த அணு உலையில் இரண்டு மேம்படுத் தப்பட்ட புதிய முறைகள் இருக்கின்றன. பாதுகாப்பு வசதிகள் மிகப் பலமாக இருக் கின்றன.

முதலாவதாக, மின்சாரம் தடைபட்டாலோ, குளிர்விக்கப்பட்ட நீர் கிடைக்கத் தடை ஏற்பட்டாலோ, உபயோகிக்கப்பட்ட எரிபொருளைப் பாதுகாக்க ஏதுவான வகையில், பம்ப் செய்யாமலேயே... மின் சாரம் இல்லாமலேயே வெப்ப மாறுபாட் டின் மூலம் தண்ணீரை மேலே செலுத்திக் குளிரூட்டக்கூடிய முறையிலான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே இங்குதான் இருக்கிறது. உபயோகிக்கப்பட்ட எரிபொருள் சூடு அதிகமாக இருந்தால், அதைக் குறைக்க, எரிபொருளைச் சுற்றிக் குளிர்ந்த தண்ணீர் தானாகச் செல்லும் வகையில் தானியங்கிக் குளிர்விப்புக் கருவி அமைக்கப் பட்டு இருக்கிறது. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சம். விஞ்ஞானிகளுடன் நான் கலந்தாலோசித்தேன். எனக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.


இரண்டாவதாக, 'கோர்’ (மூல எரிபொருள்) உருகும்போது கதிரியக்கம் வெளிப்படும். அந்தக் கதிரியக்கத்தைக் குறைக்க கீழே 'பாத் டப்’போல ஒரு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. அதனுடைய பெயர் 'கோர் கேட்சர்’ என்பதாகும். அதனுள் இருக்கும் ஒரு கலவையுடன் கீழே உருகி வழியும் 'கோர்’ இணையும்போது, முற்றிலுமாகக் கதிரியக்கம் போய்விடும். உலைகள் இரண்டு அடுக்கு சுவரால் கட்டப்பட்டு இருக்கின்றன. அதே போல 'தெர்மோ - ஹைட்ராலிக்ஸ்’ பாதுகாப்பு அம்சம், 'பாஸிவ் ஹீட் ரெடியூஸிங் சிஸ்டம்’ மற்றும் வடிவமைப்புப் பாதுகாப்பு எனப் பல பாதுகாப்பு வசதிகள் இங்கே இருக்கின்றன!'' என்று தன் கருத்துக்களை முன் வைத்தார்.

'மக்களின் போராட்டம்பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டபோது, ''போராட்டம் வேண்டாத விஷயம். மின்சாரம் அடிப்படையானது. இங்கே அணு உலை அமைந்தால் மக்களின் வாழ்வு வளம்பெறும்'' என்றார்.

'இந்தப் போராட்டத்தில் ஏதேனும் சர்வதேசச் சதி போன்ற பின்புலம் இருப்பதாக நினைக்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு, ''நான்அடிப்படையில் மிகப் பெரிய ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு இருக்கிறேன். 'யாரை யும் சந்தேகிக்காதே. அவர்களிடம் இருக்கும் நல்லவற்றை மட்டும் பார்!’ என்று எனக்குச் சொல்லி இருக்கிறார் கள்'' என்றார்.

'அணு சக்தி என்பது அணு வெடிப்பின் மூலம் பெறப்படுகிறது. அது கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் என்ன செய்ய முடியும்?’ என்ற கேள்விக்கு, ''அணு வெடிப்பு எதுவும் வெளியே வராது. என்ன ஆனாலும் உலைகளுக்கு உள்ளேயே நிகழும்!'' என்றார்.

'அணுக் கழிவுகளை என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு, ''இந்தியா புது திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது. கழிவுகளை எல்லாம் குறைந்த அளவில் வெளிவரச் செய்யும் அளவுக்கு, அதை எப்படிச் சேமிப்பது என்பதற்கு தொழில் நுட்பத்தை வகுத்திருக்கிறார்கள். 'க்ளோஸ்டு சைக்கிள்’ முறையைப் பயன்படுத்தப் போகிறார்கள். அதன் மூலம் யுரேனியத்தை 75 சதவிகிதம் பயன்படுத்திவிட்டு, மீதி யாகும் கழிவுகள் பூமிக்கு அடியில் சேமித்து வைக்கப்படும். கடலில் விட அனுமதி இல்லை'' என்றார்.

'ஹாட் ரன்’ எனும் வெப்ப நீர் சோதனை ஓட்டம்பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது, ''டம்மி எரிபொருளைப் போட்டுத் தான் பரிசோதிக்கிறார்கள். அதனால் எதுவும் பாதிப்புகள் ஏற்படாது'' என்றார்.

'ஒவ்வொரு முறையும் வெவ்வேறு வகையான அணு விபத்துகள் நிகழ்கின்றன. அப்படி இருக்கையில், 'வடிவமைப்புக்கு அப்பாற்பட்ட விபத்துகள்’ (beyond the design accidents) ஏதேனும் நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ள நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்?’ என்று கேள்வி எழுப்பியதற்கு, ''நான் கூடங்குளம் அணு உலைகளைச் சுற்றிப் பார்த்தேன். சுனாமியும் பூகம்பமும் ஒன்றாக வராது. முதலில் பூகம்பம் ஏற்படும். அதன் பிறகுதான் சுனாமி ஏற்படும். அணு உலை அமைந்திருக்கும் இந்த இடம், நிலநடுக்கப் பாதிப்பு குறைவாக இருக்கும் 2-வது இடத்தில் இருக்கின்றது. உலகத்தில் இது வரை ஆறு இடங்களில் அணு உலை விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. அதே மாதிரியோ அல்லது அதைவிட மேலாக விபத்துகள் இங்கே நடந்தாலோ, கடல் மட்டத்தில் இருந்து 13.5 மீட்டர் உயரத்தில் அணு உலைகள் இருக்கின்றன. சுனாமி, பூகம்பம் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஸ்டிமுலேட்டர் பரிசோதனைகள் எல்லாம் நடத்தித்தான் உலைகளைக் கட்டி யிருக்கிறார்கள். நெல்லையப்பர் கோயில், கல்லணை, தஞ்சை பெரிய கோயில் எல்லாம் கட்டினார்கள். சுனாமி மாதிரி ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்தா இதை எல்லாம் கட்டி இருப்பார்கள்? அவை எல்லாம் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதே. இப்போ தும் பாதுகாப்பாகத்தானே இருக்கின்றன!'' என்றார்.

''ஆனால் சுனாமி அலைகள் 100 அடி வரைகூட மேலே வரும் என்று ஆய்வு முடிவுகள் இருக்கின்றனவே!'' என்ற கேள்விக்குப் பதில் இல்லை!

''இறுதி நேரத்தில் இந்தப் போராட்டம் நடப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''நான் என்ன சார் சொல்ல முடியும். அவர்கள் தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். எது சரியானதோ, அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்!'' என்றார்.

இப்படிப் பல கேள்விகள் விடை அளிக்கப்படாமலேயே காற்றில் கரைந்தன. மக்களை நேரில் சந்திப்பதையும் தவிர்த்துவிட்டார் கலாம்!

'வீரமான தமிழா... நம் சந்ததி ஊனமாக விடலாமா?’ என்று கேட்கிறார்கள் போராளி மக்கள். எட்டுமா சிலரின் காதுகளுக்கு?

1 comment:

  1. kasu vankikkondu porattam nadaththukira kottaththidam pesa enna irukkirathu. minsaram thavai aahaiyal porattam nadaththukira kuttathi c.Gvot and TN Gvot sariyana nadavadikkhai eadukkavendum

    ReplyDelete